கவுதம் நவ்லகாவை வீட்டுச் சிறையில் வைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: மாவோயிச அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள கவுதம் நவ்லகாவை வீட்டுச் சிறையில் வைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மாவோயிச அமைப்புடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு மகாராஷ்ட்ராவின் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவுதம் நவ்லகா, தன்னை வீட்டுச் சிறையில் வைக்க அனுமதிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம். ஜோசப், ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு, 70 வயதாகும் கவுதம் நவ்லகாவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையைப் பார்க்கும்போது அவரது கோரிக்கை நிராகரிக்கத்தக்கது அல்ல என தெரிவித்துள்ளனர். எனவே, அடுத்த 48 மணி நேரத்திற்குள் அவரை வீட்டுச் சிறையில் வைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அதேநேரத்தில், கவுதம் நவ்லகாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர். அவர் தனது வீட்டில் இணையதள இணைப்பு வைத்திருக்கக் கூடாது, மொபைல் போன் உள்ளிட்ட மின்னணு தொடர்பு சாதனங்களை வைத்திருக்கக் கூடாது, போலீசார் அளிக்கும் தொலைபேசியை மட்டுமே பயன்படுத்த வேண்டும், அதுவும் ஒரு நாளைக்கு 10 நிமிடம் மட்டுமே தொலைபேசியில் பேச வேண்டும், போலீசாரின் முன்னிலையில் மட்டுமே பேச வேண்டும், அவரை அவரது மகள் மற்றம் சகோதரி ஆகியோர் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் 3 மணி நேரம் சந்திக்க அனுமதி உள்ளிட்ட நிபந்தனைகளை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.

தொலைக்காட்சி, செய்தித்தாள், புத்தகங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி அளித்துள்ள நீதிபதிகள், கவுதம் நவ்லகாவின் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமராக்களைப் பொறுத்த உத்தரவிட்டுள்ளனர். மேலும், நவ்கலாகவின் பாதுகாப்பிற்கு நிறுத்தப்படும் காவலருக்காக அவர் ரூ.2.4 லட்சத்தை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யார் இந்த கவுதம் நவ்லகா? – புதுடெல்லியைச் சேர்ந்த கவுதம் நவ்லகா இடதுசாரி ஆதரவாளர். எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி இதழின் ஆசிரியர், மக்கள் ஜனநாயக உரிமை யூனியன் எனும் அமைப்பில் இருந்துகொண்டு செயல்பட்டு வருபவர். இவர், மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்டு மகாராஷ்ட்டிர காவல் துறையினரால் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.