பள்ளி ஆசிரியர் ஒருவர், மாணவி ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதற்காகப் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய சம்பவம், ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், பரத்பூரில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுபவர் மீரா. இவர் விளையாட்டுகள் குறித்த பயிற்சி அளிக்கும் போது மாணவியான கல்பனா ஃபவுஸ்தாரை சந்தித்துள்ளார். கல்பனா, மாநில அளவில் கபடிப் போட்டிகளில் விளையாடியவர். இவர் சர்வதேச கபடிப் போட்டிக்காக ஜனவரி மாதம் துபாய் செல்ல உள்ளார் என்று கூறப்படுகிறது.
உடற்பயிற்சி வகுப்புகளின்போது கல்பனாவைச் சந்தித்த மீரா, காதல் வயப்பட்டுள்ளார். இந்நிலையில், மாணவியைத் திருமணம் செய்து கொள்வதற்காக, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
தற்போது, ஆரவ் குந்தல் என்று தன்னுடைய பெயரை மாற்றி உள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆரவ் தெரிவிக்கையில், “காதலில் எல்லாம் நியாயமானது, அதனால் தான் என் பாலினத்தை மாற்றிக் கொண்டேன்.
நான் ஒரு பெண்ணாகப் பிறந்தேன்; ஆனால் எப்போதும் என்னை நான் ஆணாகவே நினைத்தேன். பாலினத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என எப்போதும் விரும்பினேன். அந்த விருப்பப்படி 2019 டிசம்பர் மாதம், எனது முதல் அறுவை சிகிச்சையை மேற்கொண்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து கல்பனா கூறுகையில்,“ஆரவ்வை நான் ஆரம்பம் முதலே விரும்பி வந்தேன். அதனால் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்ட போதும் அவரை திருமணம் செய்து கொண்டேன். அவர் சிகிச்சையின் போது நானும் அவருடன் சென்றிருந்தேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
இவர்களின் திருமணத்தை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டு நடத்தி வைத்துள்ளனர். கிராம மக்களின் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது.