கொல்கத்தா: மேற்கு வங்காளம், கிருஷ்ணாநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: தேர்தல் வரும் போது எல்லாம் பா.ஜ.க. சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி.யை அமல்படுத்துவோம் என்று பேசுகிறது. அடுத்த மாதம் குஜராத் மாநிலத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இன்றும் ஒன்றரை ஆண்டுகளில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. எனவே பா.ஜ.க. மீண்டும் சி.ஏ.ஏ.வை பற்றி பேசுகிறது. நாட்டின் குடிமக்கள் யார் என்று முடிவு செய்வதற்கு பா.ஜ.க. யார்? மதுவா சமூகத்தினர் இந்தியாவின் குடிமக்கள் ஆவார்கள். பா.ஜ.க. மேற்கு வங்காளத்தின் வடக்கு பகுதிகளில் உள்ள ராஜ்பன்சீஸ் மற்றும் கூர்கா இனத்தவர்களை தூண்டிவிட்டு பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயல்கிறது.
மேற்கு வங்காளத்தைப் பிரிக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். வரும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.வால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. கடந்த 2019ம் ஆண்டு நாட்டில் இருந்த அரசியல் சூழல், தற்போது மாறிவிட்டது. கடந்த 2019ம் ஆண்டு பா.ஜ.க. பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருந்தது. ஆனால், இப்போது இல்லை. பல மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியில் இல்லை. பா.ஜ.க. பல மாநிலங்களில் ஏற்கனவே இறுதி நிலையை எட்டிவிட்டது. அதனால்தான் தற்போது எதிர்க்கட்சி தலைவர்களை அவதூறாகப் பேசி கைது செய்து வருகிறது. இவ்வாறு மம்தா பேசினார்.