கேரளாவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை வருகிற 17ம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
அன்று முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 41 நாட்கள் நடை திறந்திருக்கும். ஐயப்பனை தரிசிக்க கார்த்திகை 1ம் தேதி முதல் பக்தர்கள் மாலை அணிந்து கடும் விரதம் இருப்பது வழக்கம்.
மண்டல பூஜை நடைபெறும் நாட்களில் நாடு முழுவதும் இருந்து அதிகளவிலான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். கடந்த முறை கொரோனா பரவால் பக்தர்கள் அதிகளவுக்கு அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில் இந்த முறை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
இதனால், நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருவார்கள் என்றே, எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஐயப்பனை தரிசிக்க ஆன்லைனின் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருகிற பக்தர்கள் சிரமத்தை போக்கும் விதமாக சென்னை, எழும்பூர்- கொல்லம் இடையே சபரிமலை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் நோக்கி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.