ஆமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ., இன்று (நவ.,10) வெளியிட்டது.
குஜராத் சட்டசபை தேர்தல், டிச., 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடக்கவுள்ளது. ‘டிச., 8ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு, அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்’ என, தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.
38 பேருக்கு கல்தா:
இந்நிலையில் 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் 160 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பா.,ஜ., இன்று(நவ.,10) வெளியிட்டது. அதில், கட்லோடியா சட்டசபை தொகுதியில் குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் போட்டியிட உள்ளார். ஜாம் நகர் வடக்கு தொகுதியில் பா.ஜ.,வேட்பாளராக கிரிக்கெட் வீரர் ஜடஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா போட்டியிடுகிறார். கடந்த முறை எம்.எல்.ஏ.,க்களாக இருந்த 38 பேருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஹர்திக் பட்டேலுக்கு வாய்ப்பு வழங்கியது பா.ஜ.,:
காங்., கட்சியில் இருந்து விலகி பா.,ஜ.,கவில் இணைந்த ஹர்திக் பட்டேலுக்கு குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிட பாஜ., வாய்ப்பு வழங்கியுள்ளது. பட்டேல் குஜராத்தின் வீரம்கிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும், வேட்பாளர் பட்டியலில் 14 பெண்கள் உட்பட பழங்குடியினரும் இடம் பெற்றுள்ளனர்.
மும்முனை போட்டி:
குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் உள்ளது. அந்த கட்சி தலைவரும், புதுடில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்து, வாக்காளர்களை கவரும் வகையில் பேசி வருகிறார்.
‘இந்த முறை பா.ஜ.,வுக்கும், காங்கிரசுக்கும் தேர்தலில் அதிர்ச்சி வைத்தியம் அளிப்போம்’ என, கெஜ்ரிவால் கூறி வருகிறார். இதனால் குஜராத் தேர்தல் களத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement