தமிழில் வெளியாகும் கன்னட தொழிலதிபரின் வாழ்க்கை சினிமா
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் சங்கேஸ்வர். இவரது வாழ்க்கை கதை விஜயானந்த் என்ற பெயரில் சினிமாவாக தயாராகிறது. 'ட்ரங்க்' எனும் ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்குகிறார்.
நிஹால் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, வி. ரவிச்சந்திரன், அனீஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார்.
கன்னடத்தில் தயாராகும் இந்த படம் தமிழிலும் வெளிவருகிறது. தமிழ் பதிப்பு வசனத்தையும், பாடல்களையும் மதுரகவி எழுதியிருக்கிறார். படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படம் பற்றி இயக்குனர் ரிஷிகா சர்மா கூறியதாவது: 1976 ஆம் ஆண்டில் ஒரே ஒரு வாகனத்துடன் சரக்கு போக்குவரத்து துறையில் இறங்கிய விஜய் சங்கேஸ்வர், இன்று இந்தியா முழுவதும் அறியப்படும் வி.ஆர்எல் எனும் மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். இவரது வெற்றிப் பயணத்தின் பின்னணியிலுள்ள அவரது கடுமையான உழைப்பையும், அவர் சந்தித்த சவால்களையும் சுவாரசியமான திரைப்படமாக உருவாக்கி இருக்கிறோம்.
கன்னடத்தில் தயாராகி முதன்முதலாக தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய இந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியாகிறது.