நடிகர் சதீஷ் சமீபத்தில், ஆடை விஷயத்தில் சன்னி லியோனுடன் தமிழ் நடிகையை ஒப்பிட்டுப் பேசியது வைரலாகி, அவரை சீரியஸாகப் பேசவைத்திருக்கிறது.
“சன்னி லியோன் பாம்பேலருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருக்காங்க. அவங்க எப்படி ட்ரெஸ் பண்ணிருக்காங்க. ஆனா, இங்க கோயம்புத்தூர்லருந்து ஒரு பொண்ணு (நடிகை தர்ஷா குப்தா) வந்திருக்கு. சும்மா சொன்னேன்” என்று சன்னி லியோன் நடிக்கும் ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சதீஷ் கிண்டலாகப் பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பலரும், பெண்களின் சுதந்திரத்துக்கு எதிராகப் பேசுகிறார். ஆடை அவரவரின் விருப்பம் என்று சதீஷின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சர்ச்சை குறித்து நடிகர் சதீஷைத் தொடர்புகொண்டு பேசினேன்.
“பெண்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் எப்பவுமே மதிப்பவன் நான். சும்மா ஜாலிக்காக நண்பர்களிடம் பேசுவதுபோல் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது” என்று நிதானமாக நம்மிடம் பேசினார்.
“பெண்களின் ஆடைத் தேர்வு என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்; அவர்களின் சுதந்திரம். பெண்கள் இப்படித்தான் ஆடை அணியவேண்டும் என்று கட்டளையிட எனக்கு மட்டுமல்ல யாருக்குமே உரிமை கிடையாது. ‘ஓ மை கோஸ்ட்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் அப்படிப் பேசியது திட்டமிட்டுப் பேசியதல்ல. எந்த உள்நோக்கமும் கிடையாது. தர்ஷா குப்தா, சன்னி லியோன் இருவருமே எனக்கு நண்பர்கள்தான். ஜாலியா இரண்டு நண்பர்களிடம் பேசுவதுபோல் பேசிவிட்டேன். அந்த வீடியோவைப் பார்த்தாலே தெரியும். ஆனால், நான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. இனிமேல், ரொம்பக் கவனமாகப் பேசுவேன்.
எனக்கும் சகோதரிகள் இருக்கிறார்கள். மகள் இருக்கிறாள். என் வீட்டில் கூட ‘இப்படி இரு, அப்படி இரு’ என்று யாரிடமும் சொன்னது கிடையாது. கல்லூரிகளுக்குச் சென்றால் பெண்கள் சமம் என்று மாணவர்களிடம் உயர்வாகப் பேசுபவன் நான். அப்படிப்பட்டவனுக்கு எப்படிப் பெண்களின் ஆடைத் தேர்வு குறித்துப் பேசும் எண்ணம் வரும்? அதனால், இது முழுக்க முழுக்க ஜாலிக்காகப் பேசியது மட்டுமே.
எனக்கு சிகரெட், மது என எந்தப் பழக்கமும் இல்லை. செல்லும் இடங்களிலெல்லாம் அந்தப் பழக்கங்களினால் வரும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேசியுள்ளேன். அதெல்லாம் வைரலாகியிருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன். எந்த உள்நோக்கத்துடனும் சொல்லாத ஒரு விஷயம் வைரலாகிவிட்டதே என்ற வருத்தம்தான் உள்ளது.
மீண்டும் சொல்கிறேன், அதில் எந்த உள்நோக்கமும் திட்டமிடலும் கிடையாது. உண்மையில் நான் அப்படி உள்நோக்கத்துடன் சொல்லியிருந்தால் வருத்தப்பட்டிருப்பேன். யாரும் தவறாகப் புரிந்துகொள்ளவேண்டாம். இனிமேல் அப்படி நடக்காது” என்கிறார் உறுதியான குரலில்.