மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில், இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், பலத்த காயமடைந்த 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோருக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையன்று, ஒருநாள் மக்களின் மகிழ்ச்சிக்காக ஆண்டுதோறும் பட்டாசு ஆலைகளில், தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், தொழிலாளர்கள் பணிசெய்து, பட்டாசுகளை தயாரிக்கின்றனர்.
ஆனால், துரதிஷ்டவசமாக, ஆண்டுதோறும் எப்படியாவது, இதுபோன்ற ஒரு கோரவிபத்து நடந்து மனதை பதைபதைக்க செய்து விடுகிறது. மதுரை திருமங்கலம் அருகே உள்ள அழகுசிறை கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையில், அருகில் உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிசெய்து வந்தனர். இந்த ஆலையில் கோவில் திருவிழாக்கள் மற்றும் இல்லங்களில் நடக்கும் விசேஷ நிகழ்ச்சிகளின்போது பயன்படுத்துவதற்கான அதிக சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன.
இன்று வழக்கம்போல், 15-க்கும் மேற்பட்டவர்கள் பட்டாசு ஆலையில், பட்டாசுகளை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், பட்டாசு ஆலையில் திடீரென, வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த கட்டிடம் முழுவதும் இடிந்து, சிதறி நொறுங்கி தரைமட்டமானது. இந்த விபத்தில் வடக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் வல்லரசு, கோபி, விக்கி, பிரேமா உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
தகவலறிந்து வெடிவிபத்து நடந்த இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.