குஜராத் சட்டசபை தேர்தலில் 160 தொகுதிக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா போட்டியிடுகிறார்.
மொத்தம் 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 1-ம் தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலின்போது 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5-ம் தேதி நடக்கும் 2-வது கட்ட தேர்தலின்போது 99 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடத்தப்படும். டிசம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இந்நிலையில், டிசம்பர் 1-ம் தேதி நடைபெறும் முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, 2-வது கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (10-ம் தேதி) தொடங்கியுள்ளது.
குஜராத்தில், 1995-ம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ள பாஜக இந்த முறையும் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் பணிகளில் இறங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற போராடுகிறது. புதிதாக, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.
இந்த தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தயார் செய்வதற்கான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து 160 தொகுதிக்கான முதல் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிட்டுள்ளது.
இந்த தேர்தலில் குஜராத் முதல்வரான பூபேந்திர பட்டேல் கத்லோடியா தொகுதியில் போட்டியிடுகிறார். குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சாங்கவி மஜூரா தொகுதியில் போட்டியிடுகிறார். ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா போட்டியிடுகிறார் என, பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் துஷ்யந்த் குமார் கவுதம் தெரிவித்துள்ளார்.