பெங்களூரு: பெங்களூருவில் பிளாஸ்டிக் பை தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூருவின் புறநகர் பகுதியான பொம்மசந்திரா என்ற பகுதியில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதில் ஒரு தொழிற்சாலையில் பிளாஸ்டிக் பை தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இன்று அதிகாலை தொழிற்சாலையில் இருந்து கரும்புகை எழுந்துள்ளது.
இதை பார்த்த அங்கிருந்த காவலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். இருந்தபோதிலும் தீயானது தொழிற்சாலை முழுவதும் பரவியது. இதைத்தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்கள் வந்து சுமார் 3 மணிநேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் தயாரிக்கும் இயந்திரம் ஆகியவை தீயில் எரிந்து நாசமாகியது.
இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதிகாலை தீ விபத்து ஏற்பட்ட காரணத்தினால் உயிரிழப்பு எதுவும் இல்லாமல் தவிர்க்கப்பட்டது.