தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறை வெளியிட்ட அரசாணை எண் 115-ன்படி அமைக்கப்பட்ட மனிதவள சீர்திருத்தக் குழு மற்றும் அது மேற்கொள்ளவிருக்கும் ஆய்வு வரம்புகளுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இந்த எதிர்ப்புகள் மேலும் அதிகரிக்க, மனிதவள சீர்திருத்தக் குழுவின் ஆய்வு வரம்புகள் ரத்துசெய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு நேற்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில், `மனிதவள சீர்திருத்தக் குழுவைக் கலைக்க வேண்டும்’ என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.
இது குறித்து அன்புமணி ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டுப் அரசுப் பணிகளுக்கான ஆள்தேர்வு மற்றும் பயிற்சிகளில் மாற்றம் செய்தல், குத்தகை முறையில் பணியாளர்களைப் பெறுவது ஆகியவை குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்கான மனிதவள சீர்திருத்தக் குழுவின் ஆய்வு வரம்புகள் ரத்துசெய்யப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக அரசின் மனிதவளத்துறை இது குறித்து வெளியிட்ட அரசாணை எண் 115 சமூகநீதிக்கு எதிராக இருப்பதைச் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதில் உள்ள நியாயங்களை உணர்ந்தும், அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றும் முதலமைச்சர் உடனடியாக செயல்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அதே நேரத்தில் ஆய்வு வரம்புகளை மாற்றுவது மட்டுமே இந்த சிக்கலுக்குத் தீர்வாகிவிடாது. மனிதவள சீர்திருத்தக் குழு அமைக்கப்படுவதன் நோக்கம் நிரந்தர பணி நியமனங்களை நிறுத்திவிட்டு, தற்காலிக, ஒப்பந்தமுறை நியமனங்களை ஊக்குவிப்பதுதான் என்றால் அந்த சமூகஅநீதியை ஏற்க முடியாது. நிரந்தர பணி நியமனங்களே தொடரும். தற்காலிக, ஒப்பந்த முறை நியமனங்கள் அனுமதிக்கப்படாது என்று அரசு கொள்கை அறிவிப்பு வெளியிட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை என்றால் சமூகநீதிக்கு எதிராக அமைக்கப்பட்டிருக்கும் மனிதவள சீர்திருத்தக் குழுவைக் கலைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.