பொன்னேரி: மீஞ்சூர் பேரூராட்சியில் சீரான மின் வினியோகம் பெறும் வகையில், 6 இடங்களில் புதிதாக உயர் அழுத்த மின்மாற்றிகளின் பயன்பாட்டை மும்மத வழிபாட்டுடன் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் பங்கேற்று துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சியில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தொடர் மின்தடையும், குறைந்த மின் அழுத்த பிரச்னையால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இப்பிரச்னை குறித்து பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகரிடம் எடுத்து கூறி, மேற்கண்ட பேரூராட்சி பகுதிகளில் சீரான மின் வினியோகத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 3 வார்டுகளில் உள்ள 6 இடங்களில் நேற்று மாலை புதிதாக அமைக்கப்பட்ட உயர் அழுத்த மின்மாற்றிகளின் பயன்பாட்டு துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மும்மத வழிபாட்டுடன், புதிதாக 6 இடங்களில் அமைக்கப்பட்ட மின்மாற்றிகளின் பயன்பாட்டை பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் பங்கேற்று துவக்கி வைத்தார்.
இதில் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணை தலைவர் அலெக்சாண்டர், முன்னாள் திமுக நகர செயலாளர் மோகன்ராஜ், வார்டு கவுன்சிலர்கள் நக்கீரன், ரஜினி, ஜெயலட்சுமி தன்ராஜ், அபுபக்கர், ஜெயலட்சுமி ஜெய்சங்கர், ராஜன் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.