மேற்கு வங்க மாநிலத்தை இரண்டாக பிரிக்க சிலர் சதி செய்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாடியா மாவட்டம் ரணகாட்டில் இன்று நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியதாவது:
பாஜக மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளை இலக்காகக் கொண்ட குற்றச்சாட்டுகளில், அமைதியின்மையை உருவாக்கி, மாநிலத்தை இரண்டாக பிரிக்க ஒரு பிரிவினர் சதி செய்து வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் பணத்தை கொண்டு செல்ல விஐபிக்கள் தங்கள் கார்களைப் பயன்படுத்துகின்றனர்.
இதை அடுத்து, வாகன சோதனைகளை தீவிரப்படுத்தவும், கண்ணாடியுடன் கூடிய விஐபி கார்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் காவல் துறைக்கு அறிவுறுத்தி உள்ளேன். அமைதியின்மையை உருவாக்கும் முயற்சியின் பின்னணியில் மாநிலத்தை வடக்கு வங்காளமாகவும், தெற்கு வங்காளமாகவும் பிரிக்கும் திட்டம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி இது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இது முதல் முறையல்ல. ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த அமைச்சரவை கூட்டத்தில், “மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரத்தை ஏற்படுத்த சிலர் சதி செய்கிறார்கள்” என்று அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.