ஒருகாலத்தில் கிராமத்து நாயகனாகக் கோலோச்சியவர் ராமராஜன். 2012-ல் வெளியான ‘மேதை’ படத்திற்குப் பின் அரசியல் பக்கம் சென்றவர், அதன்பின் பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் இறங்கியிருக்கிறார். அவரது 45வது படமான ‘சாமானியன்’ மூலம் மீண்டும் இளையராஜாவுடன் அவர் கைகோத்திருக்கிறார்.
இளையராஜா – ராமராஜன் பாடல் கலெக்ஷன் என்றாலே அத்தனையும் எவர்கிரீன் பாடல்கள்தான். 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்திருக்கிறது. இந்தக் கூட்டணியில் உருவான ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘ஊருவிட்டு ஊரு வந்து’, ‘கரகாட்டக்காரன்’, ‘செண்பகமே செண்பகமே’ எனப் பல படங்களிலும் பாடல்கள் மட்டுமல்ல, பின்னணி இசையும் படத்தின் ஜீவனாக இருந்தது. 1999-ல் வெளியான ‘அண்ணன்’தான் இந்தக் கூட்டணியின் கடைசிப் படமாக இருந்தது.
‘சாமானியன்’ படத்திற்கு இளையராஜா இசையமைப்பது குறித்து ராமராஜன் வட்டாரத்தில் பேசினோம். “இந்தச் சந்திப்பே நெகிழ்வாக இருந்தது” என்றபடி பேச ஆரம்பித்தார்கள்.
“ராமராஜன் சார் வீட்டின் வரவேற்பறையிலேயே இளையராஜா – கங்கை அமரன் இருவரின் மத்தியில் அவர் புன்னகைக்கும் புகைப்படம் ஒன்றைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறார். அவரது வெற்றிக்குப் பெரிதும் காரணம் இளையராஜாவின் இசைதான் என எப்போதும் ஞாபகத்தில் வைத்திருப்பார். ‘அண்ணன்’ படத்திற்குப் பிறகு அவர் நடித்த படங்களின் பட்ஜெட் காரணமாக மீண்டும் இளையராஜாவுடன் கூட்டணி அமையாமல்போனது.
‘சாமானியன்’ படத்திற்காக இசைஞானியை அவர் நேரில் சந்தித்திருக்கிறார். அப்போது அவர் ‘பத்து வருஷத்துக்குப் பிறகு ஹீரோவாக நடிக்க வந்திருக்கேன். இந்தப் படத்திற்கு நீங்கள்தான் இசையமைக்க வேண்டும்’ என விரும்பிக் கேட்டுக்கொள்ள, இளையராஜாவும் மகிழ்வுடன் சம்மதித்துவிட்டார். ராமராஜனிடமும் நலம் விசாரித்துவிட்டு, ‘உடல்நலனையும் நன்கு கவனித்துக்கொள்ளுங்கள்’ என்று பாசத்தோடு சொல்லியிருக்கிறார் ராஜா” என்கிறார்கள்.
ராமராஜன் – இளையராஜா கூட்டணியில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது? கமென்ட்டில் சொல்லுங்கள்.