கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் முருகமடம் உள்ளது. இதன் மடாதிபதியாக லிங்காயத் சமூக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு உள்ளார். லிங்காயத் மடங்களை ஆன்மிகப் பள்ளிகளாக மாற்றியதில் பிரபலமான இவர், கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக, மடத்தின் விடுதியில் தங்கி 10ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட அந்த மாணவிகள் அங்கிருந்து தப்பித்து, மைசூரில் உள்ள என்.ஜி.ஓ., அமைப்பின் தஞ்சமடைந்தனர். அந்த அமைப்பினர், குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை தொடர்பு கொண்டு இது தொடர்பாக புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் பேரில், குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரி, சிவமூர்த்தி முருகா சரணகுரு மீது மைசூர் நஜர்பாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ், சிவமூா்த்தி முருகா சரணகுரு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது சித்ரதுர்கா காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி சிவமூா்த்தி முருகா சரணகுரு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், சிவமூா்த்தி முருகா சரணகுருவுக்கு எதிராக சித்ரதுர்கா போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். விசாரணை அதிகாரி கடந்த மாதம் 27ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார். போதை பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட தகவலை மூத்த போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விடுதியின் வார்டன் ராஷ்மி மற்றொரு குற்றவாளியாக கருதப்படும் பரமசிவய்யா ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முன்வர வேண்டும் எனவும் போலீசார் ஊடகங்களின் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளனர்.
சக்திவாய்ந்த லிங்காயத் சமூக மடாதிபதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், லிங்காயத் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக அரசியலில் லிங்காயத் சமூகத்தின் வாக்கு வங்கு முக்கியமானது. அம்மாநிலத்தில் 2023ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், லிங்காயத்து மடாதிபதியின் பாலியல் அத்துமீறல்கள் பற்றி, ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் வாய் திறக்காத நிலையில், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா கடும் நடவடிக்கை தேவை என வலியுறுத்தியுள்ளார்.