வட்டுவாகல் முகத்துவாரம் அகலப்படுத்தப்பட்டுள்ளது
தாழ் நிலங்கள் மற்றும் பெரும்போகத்திற்காக விதைக்கப்பட்டுள்ள வயல்களும் வெள்ளத்தில் மூழ்குவதாக பொதுமக்களும், விவசாயிகளும் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க நந்திக்கடலுடன் சங்கமிக்கும் பகுதியான வட்டுவாகல் முகத்துவாரப் பகுதியே இவ்வாறு அகலப்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக நந்திக்கடல் நீரேரியின் நீர்மட்டம் அதிகரித்து வட்டுவாகல் பாலத்திற்கு மேலாக நீர் வழிந்தோடும் நிலை ஏற்பட்டுள்ளது..
இதனை கருத்தில் கொண்டு கடந்த வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் , இடம்பெற்ற கலந்துரையாடல் மற்றும் கடந்த 8 ஆம் திகதி மாலை 3.00மணிக்கு மாவட்ட நீரியல் மற்றும் கடற்றொழில் வள அலுவலகத்தில் மீனவ, விவசாய பிரதிநிதிகளிற்கிடையிலான சந்திப்பில் எட்டப்பட்ட முடிவுகள் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து , வட்டுவாகல் முகத்துவார பகுதி நேற்று (09) மாலை 5.00மணியளவில் முல்லைத்தீவு கடலுடன் வெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
இதன்போது பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு ,பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, பெக்கோ இயந்திரம் கொண்டு முகத்துவார பகுதி வெட்டப்பட்டு நீர் கடலை சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) க.கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் லிங்கேஸ்வரகுமார், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், விவசாய மீனவ சங்க அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Sayanthiny Kanthasamy