தேர்வில் காப்பி அடித்ததால் வகுப்பறையை விட்டு ஆசிரியை வெளியேற்றிய மாணவன் 14-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டான். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நாகவாரா அருகே நூர்நகர் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் முகமது நூர். இவரது மனைவி நோகேரா. இந்த தம்பதியின் மகன் மோகின் (15). இந்த சிறுவன் தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தான்.
நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற அவன், அங்கு நடந்த தேர்வை எழுதினான். அப்போது சக மாணவனை பார்த்து காப்பி அடித்து மோகின் தேர்வு எழுதி உள்ளான். இதையடுத்து, மோகினை வகுப்பறையில் இருந்து ஆசிரியை வெளியே அனுப்பி வைத்திருந்தார். இதனால், மற்ற மாணவர்கள் முன்பு தன்னை அவமானப்படுத்தி விட்டதாக நினைத்து, பள்ளியில் இருந்து மோகின் வீட்டுக்கு வந்திருந்தான்.
நேற்று முன்தினம் மாலையில் வீட்டின் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற மோகின், 14-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். மாணவன் மோகின் தற்கொலை செய்யும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து சம்பிகேஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.