சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
வட கிழக்கு பருவமழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலசந்திரன் இன்று (நவ.12) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வட தமிழகம், புதுவை கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இது தொடர்ந்து மேற்கு பகுதியில் நகர்ந்து, தமிழகம், கேரளப் பகுதிகளைக் கடந்து அரபிக் கடல் பகுதிக்கு செல்லும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிக தீவிரமான மழை பெய்துள்ளது.
பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 6 இடங்களில் அதி கனமழை, 16 இடங்களில் மிக கனமழையும், 108 இடங்களில் கனமழையும் பதிவாகி உள்ளது. சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளில் நேற்று பதிவான 44 செ.மீ மழை தான் மிக அதிகபட்ச மழை ஆகும்.
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் பரவலாகவும், 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள நீலகரி, கோவை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், சென்னை முதல் கடலூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களில், வட உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் வாகனம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை பெய்யக் கூடும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று அவர் கூறினார்.