*திட்ட மதிப்பீடுகள் தயார்
அருப்புக்கோட்டை : அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட அருணாசலப்புரம் சமத்துவபுரம் ரூ,.1.10 கோடி மதிப்பில் புத்துயிர் பெருகிறது. அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது செட்டிக்குறிச்சி கிராம ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட அருணாசலபுரத்தில் கடந்த திமுக ஆட்சியில் 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் கட்டப்பட்டது.
சுக்கில நத்தம், மீனாட்சிபுரம், ஆமணக்கு நத்தம், திருவிருந்தாள்புரம், செட்டிக்குறிச்சி, ஆகிய கிராமங்களில் இருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு 79 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சமத்துவபுரத்தில் ரேசன் கடை, அங்கன்வாடி மையம், சிறுவர் விளையாட்டு பூங்கா என அமைக்கப்பட்டது. ஆனால் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் ரேசன் பொருட்கள் வாங்க 3கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செட்டிக்குறிச்சிக்கு சென்று ரேசன் பொருட்கள் வாங்கி வந்தனர்.
குழந்தைகள் படிப்பதற்கு அங்கன்வாடி மையம் இல்லாததால் அருகில் உள்ள ஊர்களுக்கு குழந்தைகளை சேர்க்க வேண்டியுள்ளது. சிறுவர் விளையாட்டு பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து முட்புதர் மண்டிக்கிடக்கிறது. மேலும் வீடுகளை சுற்றி முட்செடிகள் வளர்ந்து காடுபோல் உள்ளது. இதனால் பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தான் சமத்துவபுரத்தில் குடியிருந்து வந்தனர்.
ஏற்கனவே பராமரிப்பின்றி வந்த நிலையில் நாளடைவில் குடிநீர் பிரச்சனையும் வந்து சேர்ந்தது. அத்துடன் அடிகுழாய்கள் சேதமடைந்து துருப்பிடித்து விட்டது. அதிமுக் ஆட்சியில் அடிகுழாயை சரிசெய்ய சொல்லியும் நடவடிக்கை இல்லை. குடிப்பதற்கும், புழக்கத்திற்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் தனியார் குடிநீர் வாகனங்கள் மூலம் கொண்டும் வரும் குடிநீரை ஒருகுடம் தண்ணீர் 12 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.
இந்த சமத்துவபுரம் பகுதிக்கு போதிய பஸ் வசதியும் இல்லை. இதனால் சமத்துவபுரத்தில் குடியிருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே போனது. கடந்த 10ஆண்டு கால அதிமுக ஆட்சிக் காலத்தில் எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. தற்போது சமத்துவபுரத்தில் 13 பேர் மட்டும் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் காலியாக உள்ள 21 வீடுகளுக்கு பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வழங்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆனால் சமத்துவபுரத்தில் குடியிருப்பவர்கள் கூறியதாவது, ‘‘ரேசன் பொருட்கள் வாங்க 3கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செட்டிக்குறிச்சி ரேசன் கடைக்கு செல்லவேண்டியுள்ளது. மழைகாலங்களில் இந்தப்பாதையில் செல்லமுடியாது. எனவே இங்கு ஒரு பாலம் கட்ட வேண்டும். மேலும் சுக்கில் நத்தத்தில் இருந்து சமத்துவபுரத்திற்கு பேருந்து வசதி வேண்டும். அவசர தேவைகளுக்கு வாடகை கார் பிடித்து தான் செல்ல வேண்டியுள்ளது.
சுக்கில் நத்தத்தில் இருந்து சமத்துவபுரத்திற்கு வரும் பாதைகளில் தெருவிளக்கு வசதி கிடையாது. இதனால் இரவு நேரங்களில் வரமுடியவில்லை. தெருவிளக்கு வசதி இல்லாததால் விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் வீடுகளில் இரவு முழுவதும் விளக்கை எரித்துதான் தூங்க முடிகிறது. சாலைகளும் சேதமடைந்துள்ளது. குடியிருக்கும் வீடுகளை சுற்றி கருவேலமரங்கள் வளர்துள்ளது.
இதை அகற்ற வேண்டும். மேலும் மயானவசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை ஒடையில் எரிக்கும் நிலை சூழல் உருவாகி உள்ளது. எனவே இப்பகுதியில் சுடுகாடு அமைக்க வேண்டும். எனவே போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் தான் சமத்துவபுரத்தில் குடியிருக்க முடியும் என பொதுமக்கள் கூறினர். இது குறித்து வட்டாரவளர்ச்சிஅலுவலர் கூறியதாவது, ‘‘சமத்துவபுர குடியிருப்பு வீடுகள் மராமத்துப்பணி, ரேசன் கடை, சாலைவசதி, நுழைவுவாயில்,
பூங்காபராமரிப்பு, ஆகியவை சீரமைக்க 1 கோடியே 10 லட்ச ரூபாய்க்கு திட்ட மதீப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பியுள்ளோம். நிதி வந்தவுடன் சமத்துவபுர வீடுகளை புதுப்பித்து தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்’’ என்றார்.