அவர்களிடம் தப்பி தவறி ஏதும் வாங்கி குடித்து விடாதீர்கள்; 'அந்த மாதிரி' பட்டியலில் 40 பிரிட்டன் எம்.பி.க்கள்

லண்டன்,

இங்கிலாந்து நாட்டில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் உள்ளது. இதற்கு அடுத்து, நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்களை தொழிலாளர் கட்சி கொண்டுள்ளது.

இதில் தொழிலாளர் கட்சியின் பெண் எம்.பி.யாக இருப்பவர் சார்லட் நிக்கோல்ஸ். இவர் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியின்போது, ‘அந்த மாதிரி’ நடக்க கூடியவர்களின் ரகசிய பட்டியல் உள்ளது.

அந்த நபர்களுடன் தனியாக இருக்க வேண்டாம் என நான் எச்சரிக்கப்பட்டேன் என்று அவர் கூறியுள்ளார். அந்த நபர்கள், அதிகார துஷ்பிரயோகம் அல்லது பாலியல் ரீதியில் தவறாக நடக்க கூடியவர்கள் என எனக்கு தெரிவிக்கப்பட்டது.

அவர்களிடம் தப்பி தவறி ஏதும் வாங்கி குடித்து விடாதீர்கள் என எனக்கு கூறப்பட்டது. லிப்டில் பயணிக்கும்போது கூட அந்த நபர்களுடன் ஒருபோதும் செல்ல வேண்டாம். என்னை நான் பாதுகாத்து கொள்ள, எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அவர்களை தவிர்க்க வேண்டும் என என்னிடம் கூறப்பட்டது என நிக்கோல்ஸ் கூறியுள்ளார்.

அந்த பட்டியலில் உள்ளவர்களின் பெயரை குறிப்பிடாத நிக்கோல்ஸ், அவர்களில் 2 பேர் அமைச்சரவையில் மந்திரிகளாக இருந்தவர்கள் என கூறியுள்ளார்.

தொடர்ந்து நிக்கோல்ஸ், அவர்கள் யார் என்று நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து நம்மை சுற்றி திரிகிறார்கள். அவர்களுடைய வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். தண்டனையில் இருந்து தப்பித்து கொள்ளும் கலாசாரமே காணப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.

நீங்கள், நாடாளுமன்றத்தில் பாதுகாப்புடன் பணியாற்றுகிறோம் என உணருகிறீர்களா? என கேட்டதற்கு இங்கிலாந்து நாடாளுமன்ற பெண் எம்.பி.யான நிக்கோல்ஸ், இல்லை என கூறுகிறார். வெஸ்ட்மின்ஸ்டரில் விஷ கலாசாரம் காணப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் அவைகள் மற்றும் பக்கிங்ஹாம் அரண்மனை இந்த வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியிலேயே அமைந்து உள்ளது. சமீபத்தில் பிரதமர் சுனக் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து கெவின் வில்லியம்சன் பதவி விலகினார். இரண்டு நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தில், வில்லியம்சன் அதிகார வன்முறையில் ஈடுபட்டார் என கூறப்படுகிறது.

முன்னாள் பெண் தலைமை கொறடாவாக இருந்த வென்டி மார்டனுக்கு அதிக அளவில் செய்திகளை அனுப்பினார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. பாலியல் புகார்கள், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் புதிதல்ல.

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இருந்து உறுப்பினர்கள் பலர் பதவி விலகினர். இதன் தொடர்ச்சியாக ஜான்சன் பதவி விலக நேர்ந்தது.

இந்த சம்பவத்திற்கு பின்னணியில் ஊழல் குற்றச்சாட்டுகளால் பதவி விலகல் என அப்போது வெளிப்படுத்தப்பட்டது. ஆனால், அவரது அமைச்சரவையில் டோரி எம்.பி.யான கிறிஸ் பின்சர் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார்.

அவர் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் இருப்பதுபற்றி தெரிந்தும், அவருக்கு அரசில் ஜான்சன் ஒரு முக்கிய பதவியை வழங்கினார் என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டது. ஆனால் அந்த குற்றச்சாட்டுகளுக்கு அப்போது பின்சர் மறுப்பு கூறினார்.

கடந்த ஏப்ரலில், வெஸ்ட்மின்ஸ்டரில் பரவலாக பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50-க்கும் கூடுதலான எம்.பி.க்களிடம் அப்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.