நாட்டின் தலைவர்கள் சட்ட கட்டமைப்பிற்குள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பொறுப்புக்கூற வேண்டிய பின்னணியை உருவாக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் அடித்தளமிட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
அண்மையில் வத்தளை திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுக வளாகத்தில் நிறுவப்பட்ட Northwest Marine Lanka Pvt Ltd நிறுவனத்தின் புதிய படகுத் தளத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொருளாதார முகாமைத்துவத்தில் பொருத்தமற்ற தீர்மானங்களை மேற்கொள்வதன் விளைவுகளை இன்று ஒரு நாடாக நாம் அனுபவித்து வருவதாக சுட்டிக்காட்டிய சாகல ரத்நாயக்க, அதிலிருந்து மீண்டெழும் முயற்சியில் தனியார் துறையினரின் பங்களிப்பு மிகவும் பாராட்டத்தக்கது எனவும் குறிப்பிட்டார்.
மக்கள் மீதான அழுத்தத்தைத் தணித்து நாட்டை அபிவிருத்தி செய்வதே ஜனாதிபதியின் வேலைத்திட்டம் எனத் தெரிவித்த சாகல ரத்நாயக்க, சர்வதேச நிதி நிறுவனங்கள் குறிப்பிடும் விடயங்களுக்கு அப்பால் சென்று மக்களுக்கான பொறுப்பை நிறைவேற்றுவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்.
ஏற்றுமதி கைத்தொழில் அபிவிருத்தியின் ஊடாகவே இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்து, அதற்குத் தேவையான பின்னணியை உருவாக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் சுரேஷ் டி மெல், சீனோர் பவுண்டேஷனின் தலைவர் ஏ.பி. ராஜ், Northwest Marine Lanka Pvt Ltd நிறுவனத்தின் தலைவர் ஜகத் உதயகுமார, பணிப்பாளர் ஷெவந்த ரொட்ரிகோ உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
President’s Media Division
அண்மையில் வத்தளை திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுக வளாகத்தில் நிறுவப்பட்ட Northwest Marine Lanka Pvt Ltd நிறுவனத்தின் புதிய படகுத் தளத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.