மாண்டி: இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 412 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காலை 8 மணி தொடங்கி வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் அவரது மனைவி சாதனா தாக்கூர், மகள்கள் சந்திரிகா தாக்கூர், பிரியங்கா தாக்கூர் ஆகியோர் வாக்களிப்பதற்கு முன்னர் மாண்டி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். வாக்களித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் “எங்களுக்கு இன்னொரு வாய்ப்பளிப்பார்கள் என்று நம்புகிறோம். இரட்டை இன்ஜின் அரசுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
முதல்வரின் மகள் சந்திரிகா தாக்கூர், “மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். நாங்களும் மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருக்கிறோம். மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியை மக்கள் கண்டுள்ளனர். அவர்கள் நிச்சயமாக பாஜகவுக்கு தான் வாக்களிப்பார்கள்” என்றார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “வாக்காளர்கள் இந்த ஜனநாயகத் திருவிழாவில் முழு ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். வாக்களிப்பில் புதிய சாதனை படைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல் உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தாய்மார்கள், சகோதரிகள், இளைஞர்கள் திரளாக வந்து வாக்களித்து வலுவான அரசாங்கத்தை அமைக்க உதவ வேண்டும். அது நாளைய இமாச்சலத்திற்கு பொற்காலமாக இருக்க வேண்டும்” என்று ட்வீட் செய்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிககளில் போட்டியிடும் வேட்பாளர்களில் 24 பேர் பெண்கள், 388 பேர் ஆண்கள். இவர்களைதேர்வு செய்ய 55.93 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவுக்காக இமாச்சலில் மொத்தம் 7,881 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இங்கு கடந்த சில வாரங்களாக தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடந்தன. மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக தீவிர முயற்சி எடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இங்கு பிரசாரத்தில் ஈடுபட்டனர். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதால் ஏற்பட்ட நன்மைகள், கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றை வாக்காளர்களிடம் இவர்கள் எடுத்துக் கூறினர்.
பாஜக.வுக்கு சவாலாக காங்கிரஸ் கட்சி உள்ளது. இங்கு பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும், அரசு காலிபணியிடங்கள் நிரப்பப்படும் என காங்கிரஸ் உறுதியளித்துள்ளது.
பஞ்சாப்பில் நுழைந்தது போல், ஆம் ஆத்மி கட்சியும் இங்கு போட்டியிடுகிறது. டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் இங்கு பிரச்சாரம் மேற்கொண்டார். பாரம்பரிய கட்சிகளுக்கு வாய்ப்பளிக்காமல், தங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தால், டெல்லி மற்றும் பஞ்சாப் மாடல் அரசை இமாச்சலில் கொண்டு வருவோம் என ஆம்ஆத்மி உறுதி அளித்துள்ளது.
பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட் உட்பட பல மாநில கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. இமாச்சலப் பிரதேசத்தின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், குஜராத் தேர்தல் முடிவுகளோடு சேர்த்து டிசம்பர் 8-ம் தேதி அறிவிக்கப்படுகிறது.