நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதுதிப்படுத்துவதற்கான தேசிய கொள்யை உருவாக்க சம்பந்தப்பட்ட சகல நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய உப குழுவொன்றை அமைப்பதற்கு (09) கூடிய தேசிய கொள்கைகளைத் தயாரிப்பது தொடர்பான தேசிய பேரவையின் உபகுழுவில் தீர்மானிக்கப்பட்டது.
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்றுமுன்தினம் (09) கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
கமத்தொழில் மற்றும் கடற்றொழில் அமைச்சு, அந்த அமைச்சுக்களின் கீழ் உள்ள ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள் இக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், உணவுப் பாதுகாப்புத் தொடர்பான இலக்கை அடைவதற்குக் காணப்படும் தடைகள் மற்றும் கொள்கைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த அடிப்படை முன்மொழிவுகள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்த நிறுவனங்கள் தனித்தனியாக தங்கள் இலக்குகளை அடைய முயற்சிப்பதற்கு பதிலாக, அனைத்து நிறுவனங்களும் இணைந்து கூட்டான அணுகுமுறைக்குச் செல்ல வேண்டியதன் அவசியத்தைக் உபகுழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
எனவே, கமத்தொழில் மற்றும் கடற்றொழில் அமைச்சுக்கள் மாத்திரமன்றி, நீர்ப்பாசன அமைச்சு, காணி அமைச்சு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் அமைச்சு, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து இக்கொள்கைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என குழு அறிவுறுத்தல் வழங்கியது.
அத்துடன், தொழில்முனைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஊக்குவிப்பது தொடர்பான தேசிய கொள்கையைத் தயாரிப்பது தொடர்பிலும் தேசிய கொள்கைகளைத் தயாரிப்பது தொடர்பான தேசிய பேரவையின் உபகுழுவின் தலைவர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
மனித வள மற்றும் தொழில் திணைக்களம், ஏற்றுமதி அபிவிருத்தி சபை, தொழில் அபிவிருத்திச் சபை, முதலீட்டுச் சபை உள்ளிட்ட நிறுவனங்கள் பல இதற்கு அழைக்கப்பட்டிருந்தன. இந்த நிறுவனங்கள் அனைத்தையும் உள்ளடக்கி தொழில் முனைவோர் ஊக்குவிப்பு உள்ளிட்ட கொள்கைகளை வகுப்பதற்காக ஒரு குழுவை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. தொழில்முனைவோரை பாராட்டும் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட பல அடிப்படை விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.