விசாகப்பட்டினம்: உலகம் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இந்தியா மிகப் பெரிய வளர்ச்சியை கண்டு வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சாலை விரிவாக்கம், எண்ணெய், எரிவாயு உள்பட பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.12) விசாகப்பட்டினத்தில் தொடங்கி வைத்தார். மேலும், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது: “விசாகப்பட்டினம் துறைமுகம் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. இங்கிருந்து உலகம் முழுவதற்கும் வணிகம் நடைபெற்றுள்ளது. தற்போதும், உலகத்தோடு இந்தியாவை இணைக்கும் மையப் புள்ளியாக விசாகப்பட்டினம் திகழ்கிறது. மேற்கு ஆசியாவில் இருந்து இத்தாலியின் ரோம் வரை இந்திய வணிகத்தின் மையமாக விசாகப்பட்டினம் துறைமுகம் விளங்குகிறது.
தற்போது உலகம் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. ஆனால், இந்தியா பல துறைகளில் முக்கிய மைல்கற்களை எட்டி சாதனை வரலாற்றை எழுதி வருகிறது. தற்போது உலகம் நமது வளர்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. பொதுமக்களின் நலன்களை மையமாகக் கொண்டே அரசின் அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன. நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கோடு இந்த திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
நாடு சுதந்திரம் அடைந்ததன் நூற்றாண்டின்போது அடைந்திருக்க வேண்டிய இலக்குகளை நோக்கி நாம் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறோம். ஒருங்கிணைந்த வளர்ச்சியே மத்திய அரசின் இலக்கு. போதுமான கட்டமைப்புகள் இல்லாததாலும், பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு செல்வதில் அதிக சிரமங்கள் இருந்ததாலும் நாடு பெருமளவு கஷ்டப்பட்டது. இதை கருத்தில் கொண்டு பல்முனை போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த அரசு அதிக முன்னுரிமை கொடுத்தது. அதன் காரணமாக, தற்போது நிலைமை மேம்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய நினைக்கும் நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தை வகிக்கிறது. இதில் நாம் வேகமாக முன்னேறி வருகிறோம். புதிய சிந்தனைகளின் மையமாகவும், புதிய தீர்வுகள் மற்றும் வேகமான வளர்ச்சி ஆகியவற்றுக்கான இடமாகவும் தற்போது இந்தியா திகழ்கிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகவும், பயன்பாடு காரணமாகவும் எல்லையற்ற வாய்ப்புகள் இந்தியாவுக்காக திறக்கின்றன. ஆளில்லா விமானங்கள் முதல் விளையாட்டுகள் வரை, விண்வெளி ஆராய்ச்சி முதல் புதிய நிறுவனங்கள் தொடங்குவது வரை இந்தியா பல்வேறு வாய்ப்புகளைப் பெற்று முன்னேறி வருகிறது. உலக குருவாக திகழ வேண்டும் எனும் இலக்கை நோக்கி நமது நாடு வேகமாக பயணித்து வருகிறது” என்று அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.