டெல்லி: தென்கிழக்கு வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 16ம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வடகடலோர தமிழக பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக உள் மாவட்டங்கள், கேரளா வழியாக மேற்கு – வட மேற்கு திசையில் அரபிக்கடலை சென்றடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மிக கனமழையும் நாளை, நாளை மறுநாள் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்துள்ளது. நாளை மறுநாளுக்குப் பிறகு தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 16ம் தேதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.