மும்பை: பணமோசடி வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், ‘சீனாவையும், பாகிஸ்தானையும் பழிவாங்குங்க’ என்று தெரிவித்துள்ளார். சிவசேனா மூத்த தலைவரும், எம்பியுமான சஞ்சய் ராவத், பணமோசடி வழக்கில் சிறையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்தார். இதுதொடர்பாக தனியார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அதனை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது; அதனால் எனக்கு பயம் இல்லை. ஒன்றிய பாஜக அரசு விரும்பியிருந்தால் எனது கைது நடவடிக்கையை நிறுத்தியிருக்கலாம்.
ஆனால் என்னைப் போன்றவர்கள் தங்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவிடுவார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். இதற்கு முன், நாட்டில் இதுபோன்ற அரசியல் இல்லை. இவர்கள் பாகிஸ்தானை பழிவாங்க வேண்டும்; சீனாவை பழிவாங்க வேண்டும். எதற்காக எங்களை பழிவாங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நாட்டின் ஜனநாயகம் அழிந்துவிடும். என்னை கைது செய்தது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கேட்க உள்ளேன். எந்தவொரு எம்பியும் கைது செய்யப்படக் கூடாது. இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி லலித் தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.
சிவசேனாவில் இருந்து வெளியேறிய 40 எம்எல்ஏக்களில் பலர் என்னுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் மீண்டும் சிவசேனாவுக்கு வருவார்கள். பல எம்எல்ஏக்களை கடத்தி தங்களுடன் வைத்துள்ளனர். உங்களது சுயநலத்திற்காக பால் தாக்கரேவின் பெயரை பயன்படுத்துகின்றீர்கள்; இல்லையெனில் மக்கள் உங்களை செருப்பால் அடித்திருப்பார்கள். ராகுல்காந்தியின் நடைபயணத்தில் ஆதித்யா தாக்கரே (உத்தவ் தாக்கரேவின் மகன்) கலந்து கொண்டார். எங்களை பொறுத்தவரை, முந்தைய மகா விகாஸ் அகாடி கூட்டணி தொடர்கிறது. ஆதித்யா மற்றும் ராகுல் இருவரும் இளம் தலைவர்கள்.