ஜெயலலிதா மரணம், சசிகலாவின் சிறைவாசம், ஓபிஎஸ் தர்மயுத்தம், இபிஎஸ், ஓபிஎஸ் இணைவு – பிரிவு என கடந்த ஆறு வருடங்களாக அதிமுகவில் தொடர்ந்து களேபரங்கள் நடந்துவருகின்றன. இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் இணைந்த பிறகு ஒருவழியாக கட்சியின் உட்கட்சி போர் முடிவுக்கு வருமென்று ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்த்திருக்க அதுவும் கானல் நீராகி போனது. சமீபத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொள்ள நீதிமன்றம் சென்ற ஓபிஎஸ் தரப்புக்கு அங்கும் அடி விழுந்தது. இருப்பினும் மனம் தளராத ஓபிஎஸ் அதிமுகவை கைப்பற்றியே தீர்வது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.
ஆனால் இபிஎஸ்ஸோ விடாப்பிடியாக அத்தனை வழிகளிலும் ஓபிஎஸ்ஸுக்கு பேரிகார்டு போட்டுவருகிறார். இப்படி ஆளுக்கொரு பாதையில் பயணித்துக்கொண்டிருக்க ரத்தத்தின் ரத்தங்களோ எந்தப் பாதையில் செல்வது என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். நிலைமை இவ்வாறு இருக்க மக்களவைத் தேர்தல் நெருங்கிவருகிறது. நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது பாஜக.
சட்டப்பேரவைத் தேர்தலில் சில இடங்களை கைப்பற்றியதுபோல் மக்களவைத் தேர்தலிலும் இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் பாஜக மேலிடம் முனைப்புடன் இருப்பதால் இருவரும் இணைந்து பயணிக்க வேண்டும் எனவும், தேவைப்பட்டால் சசிகலா, தினகரனையும் அதிமுகவுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே பாஜகவின் டெல்லி மேலிடம் அதிமுக பிரச்னையை சுமூகமாக்கி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று தமிழ்நாடு வந்த மோடியை சந்திக்க இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். அவர்களுக்கு நேரமும் ஒதுக்கப்பட்டது. ஆனால் இருவரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக அரசியல் குறித்து பிரதமர் அவர்களிடம் பேசவில்லை.
நேற்றைய சந்திப்பு கானல் நீராகிப்போன சூழலில் இன்று சென்னையில் அமித் ஷா கலந்துகொண்ட தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ஓபிஎஸ். அப்போது ஓபிஎஸ்ஸை பார்த்த அமித் ஷா கைகுலுக்கலோடு நிறுத்திக்கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் தன்னை தனிப்பட்ட முறையில் அமித் ஷா சந்திப்பார் என நினைத்திருந்தவேளையில் அமித்ஷாவோ பாஜக அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால் ஓபிஎஸ் கடும் அப்செட் என கூறப்படுகிறது.
டெல்லி மேலிடத்திடம் கட்சி நிலவரம் குறித்து இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் பேச முயற்சித்துவரும் வேளையில் அவர்களிடம் அதிமுக விவகாரம் குறித்து மோடியும், அமித்ஷாவும் தொடர்ந்து பேசாததற்கு ஒரே காரணம்; இருவரும் ஒன்றாக இருந்தால்தான் தேர்தலில் லாபத்தை அறுவடை செய்ய முடியும் என பாஜக நினைக்கிறது. இருவரில் ஒருவர் தனியாக போனாலும் அது வீண் என்பதில் பாஜக மேலிடம் உறுதியாக நம்புகிறது. எனவே இருவரும் ஒன்றாக வந்தால் வாருங்கள் இல்லையென்றால் வராதீர்கள் என்பதைத்தான் இருவரும் சூசகமாக நேற்றும், இன்றும் உணர்த்திவிட்டு சென்றிருக்கிறார்கள் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.