மயிலாடுதுறை: ஒன்றிய அரசில் வேலை வாங்கித் தருவதாக கூறி 6 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக பாஜக மாநில அமைப்பு சாரா பிரிவு இணை அமைப்பாளர் மீது மயிலாடுதுறை போலீசில் புகார் வழங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கபாடியை சேர்ந்த மீனவர் சின்னப்பன் என்பவரே இந்த புகாரை அளித்தவர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷாவிடம் அவர் அளித்திருக்கும் புகாரில், தன்னுடைய மகன் நிஜித்குமாருக்கு ஒன்றிய அரசில் வேலை வாங்கி தருவதாக ட்ரீம்ஸ் இந்தியா பவுண்டேசன் என்ற அமைப்பை நடத்தி வரும் விஜயன் என்பவர் 6 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பெற்றதாக கூறியுள்ளார்.
ஆனால் வேலை வாங்கி தராமல், பணத்தை திருப்பி தராமல் இழுத்தடிப்பதாகவும், பணத்தை திருப்பி கேட்டால் அடியாட்கள் மூலமாக மிரட்டுவதாக புகாரில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். விஜயன் அளித்த இரண்டு காசோலைகளும் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்ட நிலையில், 24 பேரிடம் பணம் வாங்கி இருப்பதாகவும், தான் பணம் கொடுத்த இடத்தில் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் விஜயன் வாட்ஸ் அப் ஆடியோ ஒன்றை சின்னப்பனுக்கு அனுப்பியதாக தெரிகிறது.