நெல்லை: காற்றழுத்த தாழ்வு நிலை தென்மாவட்டங்களை பாதிக்காததால் கனமழை இல்லை. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் நேற்று மழை பதிவு மிகவும் குறைந்தது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று உருவானது. இதன் காரணமாக பல வட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது. அதே நேரத்தில் நெல்லை, ெதன்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்யவில்லை. சில பகுதிகளில் மட்டும் மிதமான மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தை பொருத்தவரை ராதாபுரம், சேர்வலாறு அணை பகுதியில் தலா 3 மில்லி மீட்டர் மழை பதிவானது. மற்ற இடங்களில் மழை இல்லை. வானம் மேகமூட்டமாக இருந்தும் மழை இல்லை. பாபநாசம் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 826 கனஅடியாக குறைந்துள்ளது. அணை நீர் மட்டம் 88.75 அடியாக உள்ளது. அணையில் இருந்து ஆயிரத்து 200 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர் மட்டம் 92.52 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர் மட்டம் 75 அடி. வடக்கு பச்சையாறு நீர் மட்டம் 13.25 அடி. நீர் வரத்து இல்லை.
நம்பியாறு அணை நீர்மட்டம் 12.49 அடி. கொடுமுடியாறு 49 அடி நீர் மட்டம் உள்ளது. நெல்லையை விட தென்காசி மாவட்டத்தில் நேற்று ஓரளவு பரவலாக மழை பெய்துள்ளது. இங்கு அதிகபட்சமாக கருப்பா நதி அணை பகுதியில் 56 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஆய்குடி 12, செங்கோட்டை 1, சிவகிரி 4, தென்காசி 6, கடனா 3, ராமநதி 4, குண்டாறு 2.20, அடவிநயினார் 4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.