களுத்துறையில் இருந்து காலிமுகத்திடலுக்கு நடை பேரணியாக சென்ற இரு பெண்களை பாணந்துறை கொரகாபொல பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இக் கைது நடவடிக்கைக்கு இடையூறாக இருந்ததாக மற்றொரு பெண் மற்றும் ஆண் ஒருவரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாணவ செயற்பாட்டாளர்களை விடுக்கக்கோரி போராட்டம்
மாணவ செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் கல்வேவ சிரிதம்ம தேரர் ஆகியோரை விடுவிக்கக்கோரியே களுத்துறையிலிருந்து கொழும்பு வரை இன்று (12) காலை பேரணியாக செல்ல இவ்விரு பெண்களும் முற்பட்டுள்ளனர்.
பதற்றமான சூழல்
இந்நிலையில், பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக செல்ல முற்பட்ட இரு பெண்களையும் பொலிஸார் தடுத்து நிறுத்தியதையடுத்து, அவர்களை தொடர அனுமதிக்க முடியாது என தெரிவித்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
பின்னர், பாணந்துறை பகுதியில் வைத்து அவர்களை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்ற நிலையில் இருவரும் பேருந்தில் ஏறி பாணந்துறை கோரக்காபொல பகுதியை அடைந்துள்ளனர்.
அப்பகுதியில் வைத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
நிரோஷா டேனியல் மற்றும் பிரியந்தி பர்னாந்து ஆகிய இருவருமே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு பெண்களும் பொரளை மற்றும் கல்கிஸ்ஸ பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.