ராஜீவ்காந்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ள நளினி கடைசியாக பரோல் கையெழுத்து போட காட்பாடி காவல் நிலையத்துக்கு இன்று மகிழ்ச்சி பொங்க வந்தார்.
நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேரும் தூக்கு தண்டனை கைதிகளாக இருந்தனர். அவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் கடந்த மே மாதம் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து நளினி உள்பட மற்றவர்களும் தங்களை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்து இருந்தனர்.
கடைசியாக பரோல் கையெழுத்து
இதுதொடர்பாக நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இதையடுத்து 6 பேரையும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்தினம் ஆகியோர் அதிரடியாக உத்தரவிட்டனர்.
தீர்ப்பின் நகல் இன்னும் தொடர்புடைய சிறை நிர்வாகங்களுக்கு வந்து சேரவில்லை.
இந்நிலையில் 10வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டு காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் தங்கியுள்ள முருகன் மனைவி நளினி இன்று காலை 10 மணியளவில் காட்பாடி காவல் நிலையத்திற்கு கடைசி முறையாக கையெழுத்திட வந்தார்.
அப்போது அவர் நீல நிற கலரில் புடவையும், அதற்கு மேட்சாக ரவிக்கையும் அணிந்து மகிழ்ச்சி பொங்க காவலர்களிடம் பேசியபடி இருந்ததை காண முடிந்தது.