புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலையொட்டி கியான்வாபி மசூதி உள்ளது.
இந்த மசூதி, கோயிலை இடித்து கட்டப்பட்டது என்று புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில், கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மசூதியில் நடத்தி முடிக்கப்பட்ட களஆய்வில், அங்குள்ள ஒசுகானாவின் (தொழுகைக்கு முன்பு முஸ்லிம்கள் கை, கால்களை சுத்தம் செய்யும் பகுதி) நடுவில் சிவலிங்கம் கண்டு பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதற்கிடையே கள ஆய்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லிம்கள் ஒருதரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த மே 17-ம் தேதி மாவட்ட நீதிமன்றத்துக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
அதில் “கியான்வாபி மசூதி யில், சர்வே செய்யப்பட்ட இடத்தில் உள்ள சிவலிங்கத்துக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்” என உத்தரவிட்டது. அதேநேரம், மசூதிக்குள் முஸ்லிம்கள் தொழுகை நடத்தவும், வழிபாடு செய்யவும் எந்தவிதமான தடையும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கியான்வாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்துக்கு வழங்கப்பட்ட இடைக்காலப் பாதுகாப்பு இன்றுடன் முடிகிறது. இதையடுத்து, பாதுகாப்பை நீடிக்கக் கோரி இந்து அமைப்புகள் சார்பில் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சூர்யகாந்த், பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
இந்த வழக்கை விசாரிக்க விரைவில் தனியாக அமர்வு உருவாக்கப்படும். மசூதியின் உள்ள இருக்கும் சிவலிங்கம் அமைந்துள்ள பகுதிக்கு அளித்து வரும் பாதுகாப்பு மறு உத்தரவு வரும் வரை தொடர வேண்டும்.
கியான்வாபி மசூதி விவகாரம் தொடர்பாக அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் மாவட்ட நீதிமன்றத்தில் முறையிட அனுமதி வழங்குகிறோம்.
அதேநேரம், அலகாபாத் உயர் நீதிமன்றம், கியான்வாபி மசூதி குறித்து சர்வே செய்ய சர்வே ஆணையரை நியமித்ததை எதிர்த்து, மசூதியின் மேலாண்மைக் குழுவான அன்ஜுமன் இத்ஸ்மியா மஸ்ஜித் தாக்கல் செய்த மனுவுக்கு இந்து அமைப்புகள் அடுத்த 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.