தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசை பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக சாடி உள்ளார்.
தென்னிந்திய மாநிலங்களில், பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று, கர்நாடக மாநிலத்தின் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, நேற்றிரவே ஆந்திர மாநிலத்திற்கு சென்றார். இன்று காலை ஆந்திர மாநிலத்தின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, தெலங்கானா மாநிலம் ராமகுண்டம் செல்லும் வழியில், ஐதராபாத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பிற்பகல் வந்தார்.
அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தொண்டர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
தெலங்கானா மாநிலத்திற்கு மக்கள் மீது அக்கறை கொண்ட அரசு தேவை. குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட அரசு தேவை இல்லை. மிகவும் கடினமாக உழைத்தாலும் சோர்வடையாமல் இருப்பது எப்படி என்று பலர் என்னிடம் கேட்கின்றனர். “நான் சோர்வடையவில்லை; ஏனென்றால் நான் தினமும் 2 – 3 கிலோ காலிஸ் (விமர்சனங்கள்) சாப்பிடுகிறேன். அது எனக்குள் ஊட்டமாக மாறும் வகையில் கடவுள் என்னை ஆசீர்வதித்துள்ளார்.
என்னை திட்டுங்கள்; பாஜகவை திட்டுங்கள். ஆனால் தெலங்கானா மக்களை ஏமாற்றினால் அதற்கு மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும். சிலர் விரக்தி, பயம் மற்றும் மூடநம்பிக்கை காரணமாக எனக்கு எதிராக விமர்சனங்களை பயன்படுத்துவார்கள். இந்த யுக்திகளால் வழிதவற வேண்டாம் என்று நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை மாநில அரசு வேண்டுமென்றே தடுக்கிறது. தெலங்கானா ஒரு தகவல் தொழில்நுட்ப மையமாக உள்ளது. ஆனால் இந்த நவீன நகரத்தில் மூட நம்பிக்கை ஊக்குவிக்கப்படுகிறது. இது மிகவும் வருத்தமாக உள்ளது. தெலங்கானா மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், அதை பின்தங்கிய நிலையில் இருந்து உயர்த்த வேண்டும் என்றால், முதலில் மூட நம்பிக்கையை இங்கிருந்து அகற்ற வேண்டும்.
எதிர்க்கட்சிகள் தங்களுக்கு எதிராக உள்ள ஊழல் விசாரணைக்கு பயந்து கூட்டணி அமைக்க முயற்சிக்கின்றனர். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளால் ஊழல் கணிசமாகக் குறைந்துள்ளது. ஏனெனில் அந்த பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க முடியும். இது அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே நேரடி இணைப்பை உருவாக்குகிறது.
மத்திய அரசின் அனைத்து முயற்சிகளையும் மீறி, தெலங்கானா அரசு, பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் சிக்கலை உருவாக்குகிறது. இந்த அரசுக்கு மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களும் பிடிக்கவில்லை; மாநில மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதும் பிடிக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.