புது வினோபா நகரை சார்ந்த ஜாஹிர் உசேன்(20), நவாஸ்(19), நாகூர் மீரான் (22) ஆகிய மூன்று இளைஞர்களும் சென்னை பர்மா பஜாரில் செல்போன் கடையில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களில் நாகூர் மீரான் இந்திய தேசிய லீக் கட்சியின் பகுதி பொறுப்பாளராக இருக்கிறார். நேற்றிரவு இவர்கள் மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்தபோது கல்மண்டபம் அருகில் பணியில் நின்றிருந்த போக்குவரத்து காவல் துறையினர் வழக்கமான சோதனைக்கு இவர்களை மடக்கும்போது தப்பித்துவிட்டனர். அப்போது இவர்கள் தங்களது பையை தவற விட்டனர்.
அந்தப் பையை காவல் துறையினர் சோதனை செய்தபோது அதில் செல்போன் மற்றும் அதன் டெம்பர் கிளாஸ் மற்றும் உள்ளே ஒரு நோட் இருந்தன. அந்த நோட்டில் வெடிகுண்டு போன்றவைகளை எழுதி வைத்திருந்ததாக தெரியவருகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் தொடர்ந்து நடத்திய தேடுதலில் மூவரையும் கைது செய்து நேற்றிரவே விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து நுண்ணறிவு காவல் துறையினரும் விசாரணையை மேற்கொண்டனர். இதனையடுத்து மூன்று பேரும் ராயபுரம் காவல் நிலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தற்போது மூன்று பேரின் வீட்டிலும் தீவிர சோதனை நடந்துவருகிறது. அவர்களின் பையில் இருந்த பொருள்கள் மற்றும் நோட்டில் இருந்த வாசகங்களை வைத்து மூன்று பேருக்கும் பயங்கரவாதிகளுடன் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் சோதனையும், விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சூழலில் இந்திய தேசிய லீக் கட்சியின் பகுதி பொறுப்பாளர் நாகூர் மீரான் வீட்டில் நடத்திய சோதனையில் மற்றொரு நோட் கைப்பற்றப்பட்டது. அதில் அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் தகவல்களை எழுதி வைத்திருந்ததாகவும், வெடிகுண்டு தயாரிப்பது தொடர்பான செயல்முறை விளக்கத்தை எழுதி வைத்திருந்ததாகவும் தெரிகிறது.
இதனையடுத்து நாகூர் மீரான் மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். மற்ற இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நாகூர் மீரான் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாராணை நடத்தப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த க்கட்டமாக தேசிய புலனாய்வு துறை இந்த வழக்கினை விசாரிக்கும் எனவும் காவல்துறை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் கோயம்புத்தூரில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த விவாகாரத்தில் தீவிரவாத சதி இருக்கிறது என ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டிருக்கும் சூழலில் சென்னையில் தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.