திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே திண்டுக்கல்-பெங்களூர் 4 வழிச்சாலை உள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து வரும் நகர பேருந்துகள் அஞ்சலி ரவுண்டானா அருகே கலெக்டர் அலுவலகத்திற்கு 4 வழிச்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் ஒரு சர்வீஸ் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக செல்லும் அரசு நகர் மற்றும் தனியார் பேருந்துகள், செங்குளம் அருகே நான்கு வழிச்சாலையில் இணைகின்றன. தற்போது திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே உள்ள இந்த சர்வீஸ் சாலையில் போக்குவரத்து விதிகளை மீறி பகல் நேரத்தில் பாதி சாலையை ஆக்கிரமித்து லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது.
மேலும் காலை நேரங்களில் அலுவலகத்திற்கு செல்வோர் கல்லூரி மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், டூவீலர் ஓட்டுனர்கள் அதிகளவில் இந்த சர்வீஸ் சாலையை பயன்படுத்துகின்றனர். இந்த சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமித்து லாரிகளை நிறுத்துவதால், அந்த வழியாக செல்லும் டூவீலர் ஓட்டுனர்கள் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் ஓடையில் தவறி விழும் அபாயம் நிலவுகிறது. ஏதேனும் விபரீதம் நிகழும் முன்பு, சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் லாரிகளை அப்புறப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.