உலக மக்கள்தொகை 800 கோடியை கடந்து விட்டதாக அமெரிக்க புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை 11ம் தேதி ஐ.நா. வெளியிட்ட வெளியிட்ட மக்கள் தொகை புள்ளி விவரத்தில், நவம்பர் 15ஆம் தேதி உலக மக்கள்தொகை 800 கோடியை தொடும் என கணித்திருந்தது. அது தற்போது கடந்து விட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் உலக மக்கள் தொகையானது சராசரியாக 1.10 சதவீதம் அதிகரிக்கிறது. அதன் அடிப்படையில், ஐ.நா கணிப்பின்படி அடுத்த ஆண்டு அதிக மக்கள் தொகை நாடு என்ற சீனாவின் சாதனையை இந்தியா முறியடிக்கும் என கூறப்பட்டுள்ளது. ஐ.நா மக்கள் தொகை நிதியத்தின் தலைவர் நடாலியா, 800 கோடி மக்கள் தொகை “மனிதகுலத்திற்கு ஒரு முக்கியமான மைல்கல்”. மக்கள்தொகை அதிகரிப்பை பொறுத்தவரை, இது ஆயுள்காலம் அதிகரிப்பதையும், தாய் மற்றும் குழந்தை இறப்புகள் குறைவாக இருப்பதையே குறிக்கிறது. ஆனால், இந்த மக்கள் தொகை அதிகரிப்பு கொண்டாட்டங்களை விட அதிக கவலைகளை ஏற்படுத்துகிறது’’ என கூறியுள்ளார்.
மக்கள்தொகை நிபுணர் கனெம், ‘‘மக்கள் தொகை அதிகரிப்பை பற்றி கவலைப்படுவதை விட, பணக்காரர்களின் அதிகயளவு நிலத்தின் வளங்களின் நுகர்வுகள் குறித்தே கவலைப்பட வேண்டும்’’ என்று கூறியுள்ளார். மேலும், 2030 இல் உலக மக்கள் தொகை 850 கோடியாகவும், 2050 இல் 970 கோடியாகவும், 2080 இல் 1040 கோடியாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2050இல் அதிகரிக்கும் மக்கள் தொகையில் 50 சதவீத்தை காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய 8 நாடுகள் கொண்டிருக்கும் என ஐ.நா கூறியுள்ளது.