சட்டவிரோதமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதில் உடந்தையாக இருந்ததாக பதிவான வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-11ம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 37 லட்சத்து 65 ஆயிரத்து 600 ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, மகன் கௌதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி பொன்முடி தாக்கல்செய்த மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்து தன்னை விடுவிக்கக்கோரி பொன்முடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வழக்கில் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து மனுதாரருக்கு எதிராக வழக்கை தொடர்ந்து நடத்த போதுமான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, அமைச்சர் பொன்முடியை விடுவிக்க மறுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM