தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகனமழை வெளுத்து வாங்கியுள்ளது. சீர்காழியில் மட்டும் 44 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. குடியிடுப்புகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் முழ்கி அழுகும் நிலையில் உள்ளது.
சீர்காழி உப்பனாற்றின் கரை உடைந்ததால் பத்தாயிரம் வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. சூரக்காடு பகுதியில் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் கழுத்தளவு மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பூம்புகார், திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்தில் 2 விசைப்படகுகள், 6 பைபர் படகுகள் கடலில் மூழ்கின.
இன்று காலை 6 மணி நிலவரப்படி சீர்காழியில் 44 செ.மீ மழை, கொள்ளிடத்தில் 31 செ.மீ. செம்பனார் கோயில் 24 செ.மீ மழை, மயிலாடுதுறை 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
ஏற்கனவே ஆய்வறிக்கையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 சென்டிமீட்டர் வரை மழை பதிவாகலாம் என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட 40 செnடி மீட்டருக்கு மேல் சீர்காழி பகுதியில் மட்டும் மழை பதிவாகியுள்ளது.
தொடர்ந்து மாவட்டம் முழுவதும் வாய்க்கால்களில் தண்ணீர் வடிவதற்கு வழியின்றி அறுபதாயிரம் ஏக்க சம்பா பயிர்கள் தண்ணீரில் தற்போது மூழ்கி இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள நீரை உடனடியாக வெளியேற்றவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.