சென்னை: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அரபிக் கடலுக்கு நகர்ந்து செல்லக்கூடும். இதன் தாக்கத்தால் தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது: வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வட இலங்கை பகுதிகளில் நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. 11-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 21 இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 11 செ.மீ., கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 10 செ.மீ., சிதம்பரத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக, புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். 2 நாட்களில்தமிழகம், கேரளாவை கடந்து அரபிக்கடலுக்கு செல்லக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்ற நிலையில், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 12, 13, 14-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும், 15-ம்தேதி ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
12-ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், நீலகிரி,கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய 17 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 13-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு சென்னை மற்றும் புறநகரில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கன முதல்மிக கனமழை பெய்யக் கூடும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், கனமழை எச்சரிக்கையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், சேலம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.