பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் மீது தனிக் கவனம் செலுத்துகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழா நடைபெற்றது. அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
நம் நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கிறது. 2025 ஆம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவின் வளர்ச்சி இருக்கும். கடந்த 8 ஆண்டுகளில் வளர்ச்சிப் பாதையில் 11 ஆவது இடத்திலிருந்து 5 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. சமீபத்தில் கிடைத்த ஆய்வறிக்கை படி 2027 ஆம் ஆண்டில் மூன்றாவது இடத்தில் இருக்கும்.
60 கோடி மக்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு, கழிப்பறை, மின்சார வசதிகளைபிரதமர் நரேந்திர மோடி அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ஜிடிபியில் 2023 – 24 ஆண்டில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. ஜி – 20 நாடுகள் மத்தியில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறும். பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் மீது தனி கவனம் செலுத்துகிறார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி கூர்ந்து கவனித்து வருகிறார். தமிழகத்திற்கான வரியின் பகிர்மான தொகை 90 சதவிகிதம் அதிகரித்து உள்ளது. மத்திய அரசு வழங்கும் மானியத் தொகை 171 சதவீதம் அதிகரித்து உள்ளது. தேசிய நெடுஞ்சாலைக்கு வழங்கப்படும் தொகை 8,900 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.