சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட 4,520 பேர், 5 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் சுமார் 40,500 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளன என்று அரசு தெரிவித்துள்ளது.
தமிழத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று (நவ.11 ) தமிழகத்தின் 37 மாவட்டங்களில் சராசரியாக 47.03 மி.மீ. மழை பெய்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 250 மி.மீ. சராசரி மழை பதிவாகியுள்ளது. சீர்காழியில் 436 மி.மீ., கொள்ளிடம் பகுதியில் 317 மி.மீ., செம்பனார் கோயிலில் 242 மி.மீ. அதி கனமழையும், கடலூர் மாவட்டத்தில் புவனகிரியில் 206 மி.மீ., சிதம்பரம் பகுதியில் 308 மி.மீ. என அதி கனமழை பதிவாகியுள்ளது. கரூர், திருப்பூர், புதுக்கோட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 18 மழைமானி நிலையங்களில் மிக கனமழையும், பல்வேறு மாவட்டங்களில் 108 மழைமானி நிலையங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.
இந்த கனமழை காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் நிவாரண மையங்கள் அமைப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.12) தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி சைலேந்திரபாபு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜயந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், “சென்னையில் நேற்று 51.95 மி.மீ. மழை பெய்துள்ளது. மேலும், 14 மழைமானி நிலையங்களில் கனமழை பதிவாகியுள்ளது. சென்னையில் 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது; தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 926 நீர் இறைப்பான்கள் தயாராக உள்ளன என்றும், தற்போது, மழை நீரை வெளியேற்ற 618 நீர் இறைப்பான்களும், 45 JCB-களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை 16,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது” என்ற விபரம் முதல்வருக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும், தொடர்ந்து மழை பெய்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசித்த 2729 குடும்பங்களைச் சார்ந்த 4452 நபர்கள் 4 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்த 68 நபர்கள் 1 நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் 4,520 நபர்கள் 5 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மயிலாடு துறை, கடலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் சுமார் 40,500 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது. இதனை விரைவில் வடியவைக்க உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தினார்.
முன்னதாக, நீலகிரி, ராணிப்பேட்டை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களுக்கு தலா 1 குழு வீதம் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 92 வீரர்களை கொண்ட 4 குழுக்கள் அனுப்பி வைக்கவும், கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 163 வீரர்களை கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்கள் நிலைநிறுத்திடவும் முதல்வர் உத்தரவிட்டார்.
மேலும், சென்னை மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புயை பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.
இதனைத் தவிர்த்து, அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும், உபரி நீர் வெளியேற்றும்போது பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும், மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்க வேண்டும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், கனமழையின் காரணமாக ஏற்படும் சவால்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை முதல்வர் வழங்கினார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.