நிலக்கோட்டை: தற்சார்புடைய இந்தியாவை உருவாக்குவதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது என திண்டுக்கல்லில் நேற்று நடந்த காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கில் நேற்று மாலை 4 மணியளவில் 36வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் கே.எம்.அண்ணாமலை தலைமை வகித்து, அறிக்கை வாசித்தார். துணைவேந்தர் குர்ஜித் சிங் வரவேற்றார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலை வகித்தார்.
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலர் இறையன்பு, முதன்மை செயலர் உதயச்சந்திரன், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, கே.ஆர்.பெரியகருப்பன், டிஜிபி சைலேந்திரபாபு, ஐஜி அஸ்ரா கார்க், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேசிய கீதத்தில் துவங்கி தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் காந்தி கிராம பல்கலை கிராமிய பாடல்களும் ஒலித்தன. விழாவில், இளங்கலை பட்டம் முதல் முனைவர் பட்டம் வரை படித்த 2,314 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. 115 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. பிரியா, சபரிநாத், பிரியங்கா, ஜான் வர்கீஸ் ஆகிய 4 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழை பிரதமர் மோடி வழங்கி பட்டமளிப்பு விழாவை தொடங்கி வைத்தார். இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களையும் அவர் வழங்கினார்.
பின்னர், பிரதமர் மோடி, ‘வணக்கம்’ என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார். அவர் பேசியதாவது: மிகவும் முக்கியமான காலகட்டத்தில் நீங்கள் பட்டம் பெறுகிறீர்கள். காந்தியின் கனவுகளுக்கு சவால் நிறைந்த காலம் இது. மற்றவர்களின் கலாச்சாரத்திற்கு மதிப்பளிப்பதே தேச ஒற்றுமைக்கு காரணம். இயற்கை விவசாயத்தில் இளைஞர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். கிராம வளர்ச்சிக்காக இளைஞர்கள் உழைக்க வேண்டும். கிராமம், நகரம் என்ற வேறுபாடு தற்போது இல்லை. கிராமங்கள் வளர்ச்சிக்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இயற்கை விவசாயம் நாட்டின் உரத்தேவையை குறைக்கும். கடந்த 8 ஆண்டுகளில் காதி விற்பனை 300 சதவீதம் அதிகரித்துள்ளது. கிராம உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சுயசார்பு பாரதம் திட்டத்தில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமங்களில் இயற்கை விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இயற்கை விவசாயம் மீது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளில் சூரிய மின் உற்பத்தி 200 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒற்றுமையான, சுதந்திரமான இந்தியாவை உருவாக்கத்தான் மகாத்மா காந்தி பாடுபட்டார்.
செய்து முடிக்க முடியும் என்று நம்பிக்கையோடு கூறும் இளைஞர்கள் கையில்தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது. பெண்களின் வளர்ச்சி தான் தேசத்தின் வளர்ச்சி. கிராமங்களை சுயசார்புடையதாக ஆக்குவதற்கு காதியை முக்கிய காரணியாக காந்தி பார்த்தார். கிராமங்கள் சுயசார்புடையதாக இருப்பதன் மூலம்தான், நாடு சுயசார்பு உடையதாக மாறும் என்பது காந்தியின் சிந்தனை. அந்த சிந்தனையின் அடிப்படையிலேயே சுயசார்பு இந்தியாவை ஒன்றிய அரசு உருவாக்கி வருகிறது. சுதந்திர போராட்டக் காலத்தில் சுதேசி இயக்கம் தமிழ்நாட்டிலிருந்து தோன்றியது. தற்சார்புடைய இந்தியாவை உருவாக்குவதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
சண்டை, சச்சரவுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் தொடங்கி, புவி வெப்பமடைதல் பிரச்னைக்கு தீர்வு காண்பது வரை தற்காலத்தின் பல்வேறு சவால்களுக்கு தீர்வாக காந்திய சிந்தனை விளங்குகிறது. கிராமங்களின் ஆன்மா, நகரத்தின் வளர்ச்சி என்கிற கொள்கையின் அடிப்படையில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மதிப்பு அதிகரிக்க வேண்டும். கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்த ஏற்றத்தாழ்வை அரசு குறைத்துள்ளது. கிராமங்களில் சூரிய சக்தி பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் எரிசக்தி துறையில் இந்தியா தற்சார்பு உடையதாக மாறும். இயற்கை விவசாயம் நாட்டில் அதிகரித்து வருவது குறித்து மகிழ்ச்சி. இவ்வாறு மோடி பேசினார்.
பிரதமருக்கு ‘பொன்னியின் செல்வன்’ வழங்கிய முதல்வர்
* மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் பகுதியில் உள்ள அம்பாத்துறையில் இருந்த ஹெலிகாப்டர் தளத்தை பிரதமர் மோடி சென்றடைந்தார். ஹெலிகாப்டர் தளத்தில் பிரதமரை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் வரவேற்றனர். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘பொன்னியின் செல்வன்’ தமிழ் நாவலின், 5 பாகங்கள் கொண்ட ஆங்கில மொழிபெயர்ப்பு பதிப்பினை பிரதமருக்கு வழங்கி வரவேற்றார்.
* காந்திகிராம பல்கலை பட்டமளிப்பு விழாவிற்கு ஹெலிகாப்டரில் சென்ற மோடி, மாலை திரும்பும்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை விமானநிலையத்திற்கு சாலை மார்க்கமாக வந்து சேர்ந்தார். மழை காரணமாகவும், மாலை 5 மணிக்கு மேல் ஹெலிகாப்டர் பறக்கக் கூடாது என்ற வான்வெளி பாதுகாப்பு விதி இருப்பதாலும் பிரதமர் சாலைமார்க்கத்தி்ல திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
* தொடர்ந்து பிரதமர் மோடி அங்கிருந்து, ஒன்றரை கி.மீ தூரம் காரில் முன்புறம் இருக்கையில் இருந்து எழுந்து, சாலையின் இருபுறமும் இருந்த மக்களை பார்த்து கையசைத்தபடி விழா அரங்கத்திற்கு வந்தார்.
* மதுரையிலிருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி மாலை 6.50 மணிக்கு விசாகபட்டினம் கிளம்பிச் சென்றார்.
* இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. நேற்று நடந்த 36வது பட்டமளிப்பு விழாவில், 2018-2019 மற்றும் 2019-2020 ஆண்டுகளில் இளங்கலை பட்டம் முதல் முனைவர் பட்டம் வரை படித்த 2,314 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. பல்வேறு பாடங்களில் முதலிடம் பிடித்த 115 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. விழா மேடையில் இளங்கலை படிப்பில் ஒரு மாணவி, ஒரு மாணவர், முதுகலை படிப்பில் ஒரு மாணவி, ஒரு மாணவர் என மொத்தம் 4 பேருக்கு மட்டும் பிரதமர் மோடி பட்டங்களை வழங்கினார். இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கினார்.
* வரவேற்பால் அகமகிழ்ந்தேன் பிரதமர் டிவிட்
தமிழகத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து பிரதமர் மோடி நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வணக்கம் தமிழ்நாடு! திண்டுக்கல்லில் அளிக்கப்பட்ட மிகச்சிறப்பான வரவேற்பால் அகமகிழ்ந்தேன்,’ என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
* கொட்டும் மழையிலும் முதல்வருக்கு வரவேற்பு
காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இவரை வரவேற்று திண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வேடசந்தூர் கருக்காம்பட்டியில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் அர.சக்கரபாணி, கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் நிர்வாகிகள் கொட்டும் மழையில் வரவேற்பு அளித்தனர். வேடசந்தூர் பைபாஸ் சாலையிலிருந்து நிலக்கோட்டை வரை சுமார் 60 கிமீ தூரத்திற்கு சாலை ஓரத்தில் திமுக கொடிகள் கட்டப்பட்டிருந்தன. வழி நெடுகிலும் திமுகவினர் திரண்டு வந்து பிரமாண்ட வரவேற்பு வழங்கினர்.
* காந்தி குல்லா
பட்டமளிப்பு விழாவிற்கு வந்த சிறப்பு அழைப்பாளர்களுடன், பட்டங்கள் பெற வந்தவர்களுக்கும் கதரிலான காந்தி குல்லா வழங்கப்பட்டது. விடுதலைப் போராட்ட காலத்தில் 1921ம் ஆண்டு வரை காந்தியடிகள் இந்த குல்லாவை அணிந்ததால், இது ‘காந்தி குல்லா’ என பிரபலமானது. காந்தியக் கொள்கை, தேசிய உணர்வு உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தும் அடையாளப் பெருமையும் இந்த குல்லாவிற்கு உண்டு.
* ‘காசியில் தமிழ் சங்கமம்’
பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது: கிராமப்புற வளர்ச்சி குறித்த மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வையைப் புரிந்து கொள்ள வேண்டும். கிராமப்புற வாழ்க்கையின் விழுமியங்களைப் பாதுகாத்து கிராமங்கள் முன்னேற வேண்டும். கிராமப்புற மேம்பாட்டை நோக்கிய அரசின் தொலைநோக்கு பார்வையானது, மகாத்மா காந்தியின் லட்சியங்களிலிருந்து உத்வேகம் பெறுகிறது. துப்புரவு என்பது மகாத்மா காந்திக்கு மிகவும் விருப்பமான ஒன்று. இதற்கு ஸ்வச் பாரத் திட்டம் எடுத்துக்காட்டாக இருக்கிறது.
மகாத்மா காந்தி ஒன்றுபட்ட சுதந்திர இந்தியாவுக்காகப் போராடினார். காந்திகிராமமே இந்தியாவின் ஒருமைப்பாட்டின் கதை. காசியில் விரைவில் காசி தமிழ் சங்கமம் நடக்கிறது. காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள பந்தத்தை கொண்டாடுவோம். இது ‘ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரதம்’. ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்ளும் இந்த அன்பும், மரியாதையும்தான் நமது ஒற்றுமைக்கு அடிப்படையாக இருக்கிறது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கமாக இருந்தாலும், ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்பாக இருந்தாலும், உலகின் வளர்ச்சி இயந்திரமாக இருந்தாலும், ஒரு நூற்றாண்டில் மிக மோசமான நெருக்கடியை உலகம் எதிர்கொண்ட நேரத்தில், இந்தியா ஒரு பிரகாசமான இடமாக இருந்தது. இவ்வாறு அவர் பேசினார்.