வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, தான் படித்த பள்ளி மற்றும் விடுதிக்கு சென்றார். அங்கு தன்னுடன் படித்த நண்பர்களுடன் உரையாடியதுடன் உணர்ச்சிவசப்பட்டு பழைய நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்தார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு இரண்டு நாள் பயணமாக ஒடிசாவுக்கு நேற்று முன்தினம் சென்றார். அப்போது, உலகப் புகழ்பெற்ற புரி ஜெகன்னாதர் கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு சென்றார். நேற்று, கந்தகிரியில் தான் படித்த அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்றார்.
பின், புவனேஸ்வரில் தான் தங்கியிருந்த பழங்குடியினர் மாணவியர் விடுதிக்கும் சென்று பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து தன்னுடன் படித்த சிலரை சந்தித்து மகிழ்ந்தார். அப்போது உணர்ச்சிப் பெருக்குடன் சிலரைப் பற்றி விசாரித்தார்.
இதுகுறித்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியதாவது:
நான் 1970 – 74 வரை கந்தகிரி உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். அப்போது பள்ளி ஓலைக்குடிசையாக இருந்தது. வகுப்பறையின் மண் தரையை மாட்டுச் சாணம் பூசி மெழுகும் வேலையை மாணவியர் தான் செய்வோம்.
இப்போது பள்ளிக்கு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், இணையதள வசதியெல்லாம்கூட இருக்கிறது. இப்போதுள்ள மாணவியர் அதிர்ஷ்டசாலிகள்; கிடைத்திருக்கும் வசதிகளை பயன்படுத்தி கல்வியில் முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, மத்திய கல்வித் துறை சார்பில் புவனேஸ்வரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, “கல்வி தான் அதிகாரத்தை பெற்றுத் தரும். அதிலும் தாய்மொழியில் கல்வி கற்றால் சிந்தனைத் திறன் அதிகரிக்கும். தாய்மொழி வாயிலாகத்தான் எளிதாக கற்றுக் கொள்ள முடியும்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement