திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக 36 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்று. இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திண்டுக்கல் வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி தலைமையிலான கட்சியினர் வேடசந்தூரில் வைத்து வரவேற்பு அளித்தனர். இதையடுத்து பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மதுரை விமான நிலையம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சின்னாளபட்டியில் காந்தி கிராம அறக்கட்டளைக்கு சொந்தமான ஹெலிபேட் தளத்தில் இறங்கினார். அவரை வரவேற்க ஸ்டாலின், ஐ.பெரியசாமி, எல்.முருகன் ஆகியோர் ஹெலிபேட் தளத்துக்கு சென்றனர்.
காலை முதல் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தொடர்மழை பெய்துவந்தபோதிலும், திமுகவினர் ஸ்டாலினை வரவேற்கவும், பாஜகவினர் பிரதமரை வரவேற்கவும் பல்வேறு பகுதிகளில் இருந்து சின்னாளபட்டி பகுதியில் மழையில் நனைந்தவாறு குவிந்தனர். குறிப்பாக ஹெலிபேட் தளத்தில் இறங்கிய பிரதமர் கார் மூலம் பல்கலை வளாகத்தில் உள்ள அரங்குக்கு வந்தார். பல்கலை நுழைவுவாயில் வெளியே நான்கு வழிச் சாலையில் பாஜக தொண்டர்கள் குவிந்திருந்தனர். அப்போது தொண்டர்களுடன் சேர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கையசைத்து பிரதமர் மோடியை வரவேற்றார்.
இதையடுத்து விழா அரங்குக்கு பிரதமர், முதல்வர் உள்ளிடோர் வர மாநிலத் தலைவர் அண்ணாமலையும் அரங்குக்குள் வந்தார். விழாவில் 4 மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய பிரதமர், இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கும், மிருதங்க வித்வான் சிவராமனுக்கும் கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார். காலை முதலே மதுரை விமான நிலையத்தில் வைத்து இ.பி.எஸ், ஓ.பி.எஸ் சந்திக்க உள்ளதாகவும், அங்கு வைத்தே அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இத்தகையை பரபரப்பான சூழலில் விழா முடிந்து பிரதமர் புறப்பட்டபோது அண்ணாமலையும் பிரதமர் காரில் ஏறி அமர்ந்து சென்றார். அப்போது மழை அதிகமாக பெய்யத் தொடங்கியதால் ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்துவிட்டு சாலை மார்க்கமாகவே பிரதமர் கார் மதுரை விமானம் நிலையம் நோக்கி சென்றது.
பிரதமருக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், ஒவ்வொரு நகர்வுகளும் திட்டமிட்டு நடத்தப்பட்டன. பாதுகாப்பு அதிகாரிகளை மீறி யாரும் பிரதமரை நெருங்க முடியாத நிலையே இருந்தது. அப்போது மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரதமர் கார் அருகே சென்று அவருக்கு வணக்கம் தெரிவித்தார். இதையடுத்து கார் கதவு திறக்கப்பட்டவுடன் அவர் காரில் அமர்ந்து பிரதமருடன் சென்றார். இதை பாஜகவினர் மட்டுமில்லாது திமுகவினரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இதுகுறித்து பாஜகவினரிடம் விசாரித்தோம். `திண்டுக்கல்லில் ஆரவாரத்தோடு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதில் பிரதமர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். நிகழ்ச்சியின் ஒவ்வொரு நிமிடமும் திட்டமிடப்பட்டிருந்தால் கட்சியினர் யாரும் பிரதமரைச் சந்தித்து பேச முடியாத நிலை இருந்தது. அதனடிப்படையில் போதிய நேரமின்றி இருந்ததால், தமிழக நிலவரத்தை அறிய மாநிலத் தலைவரை ப்ரோட்டாகால் முறையை மீறி தன்னுடைய காரிலேயே அழைத்துச் சென்றுள்ளார். அதுமட்டுமில்லாது தமிழக பாஜகவில் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை வருகைக்கு பிறகு நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அண்ணாமலை பிரதமரின் குட் புக்கில் இடம் பெற்றுள்ளார் என்பதாலும் இது நடந்துள்ளது’ என்றனர்.