பாகிஸ்தானில் விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை ஆகிய பிரச்சனைகளுக்கு இம்ரான் கானின் மோசமான ஆட்சிமுறையே காரணம் என குற்றம் சாட்டி, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்தன. அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது. அதையடுத்து பாகிஸ்தான் முன்னாள் முதல்வர் நவாஸ் ஷெரிஃபின் சகோதரர், ஷாபாஸ் ஷெரீஃப் பிரதமராக பதவி ஏற்றார்.
இதையடுத்து வெளிநாட்டு சதி காரணமாக தனது அரசு கவிழ்க்கப்பட்டது என கூறியும், உள்நாட்டு அரசுக்கு எதிராகவும் நாடு தழுவிய மக்கள் பேரணிகளை தொடர்ந்து இம்ரான்கான் நடத்தி வருகிறார். இந்த நிலையில்
கடந்த நவம்பர் 3ம் தேதி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வாசிராபாதில் அரசுக்கு எதிராக மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினார். அப்போது, இம்ரான்கான் மற்றும் அவர் அருகே இருந்தவர்கள் மீது கூட்டத்தில் இருந்த நபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் இம்ரான் கானின் வலதுகாலில் குண்டு பாய்ந்தது. இது அவரை படுகொலை செய்யும் முயற்சி என இம்ரான்கானின் தெஹ்ரீக்- இ- இன்சாஃப் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இம்ரான் கானுக்கு காலில் குண்டு பாய்ந்த இடத்தில் உடனடியாக கட்டு போடப்பட்டு, அவர் லாகூரில் உள்ள சவுகத் கானும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு 2 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. துப்பாக்கிச்சூடு குறித்து இம்ரான்கான் கூறும்போது, ‘‘என் வலது காலில் இருந்து மூன்று தோட்டாக்களை எடுத்தார்கள். இடதுபுறத்தில் சில துண்டுகள் இருந்தன, அதை அவர்கள் உள்ளே விட்டுவிட்டனர். எனது கால் எலும்புகள் சேதமடைந்துள்ளது. இயல்பு நிலைக்கு திரும்ப 6 வாரங்கள் வரை ஆகும்’’ என்றும் அவர் கூறியுள்ளார்.
ட்விட்டரில் அனைவருக்கும் சந்தா கட்டணம்: எலான் மஸ்க் அடுத்த அதிரடி?
இதையடுத்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நவீத் முகமது பஷீர் என்பவரை போலீசார் கைது செய்தனர். ‘இம்ரான் கானை மட்டும் தான் கொலை செய்ய நான் வந்தேன். வேறு யாரும் எனது குறி அல்ல. இம்ரான் கான் மக்களை தவறான வழியில் நடத்துகிறார். அதை என்னால் ஏற்க முடியவில்லை’ என்று அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இம்ரான் கான் மற்றும் அவரது மகன்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கைபர் பக்தவுன்காவா மாகாண காவல்துறையின் கூடுதல் கமாண்டோ படை சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கமாண்டோ படை நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் தனது பாதுகாப்பு பணியை துவங்கியுள்ளது.