சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. இதில், 66 சதவீத வாக்குகள் பதிவாகின. இமாச்சல பிரசேத்தில் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான பாஜ ஆட்சி நடக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு நடத்த சட்டப்பேரவை தேர்தலில், 68 தொகுதிகளில் பாஜ 44 தொகுதியையும், காங்கிரஸ் 21 தொகுதியையும் கைப்பற்றின. 5 ஆண்டு பதவிக்காலம் முடிவதையொட்டி, இமாச்சலில் 68 தொகுதிக்கு ஒரே கட்டமாக நவம்பர் 12ம் தேதி தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இம்முறை பாஜவை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களம் இறங்கின. டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி இமாச்சலிலும் வலுவாக காலூன்ற களமறங்கி உள்ளது. மேலும், இன்னும் 2 ஆண்டில் மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இமாச்சல் தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதனால், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாஜவுக்காக சூறாவளி பிரசாரம் செய்தனர். காங்கிரஸ் சார்பில் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 55 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அமைதியான முறையில் தேர்தலை நடத்த 67 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர் மற்றும் 11,500க்கும் மேற்பட்ட மாநில போலீசார் என மொத்தம் 30,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தாலும், அதன் பின் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர். மலைப்பிரதேசம் என்பதால் வாக்காளர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முதல் ஒரு மணி நேரம் வரை 5 சதவீதம், காலை 11 மணி வரை 19.98 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 37.19, மாலை 3 மணி வரை 55.65 சதவீதமும் மாலை 5 மணிக்கு வரை 65.92 % பதிவானது. இத்தேர்தலில் 66 சதவீத வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இமாச்சல பிரதேசத்தை பொறுத்த வரை, கடந்த 30 ஆண்டாக பாஜவும், காங்கிரசும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. ஆளுங்கட்சிகள் அடுத்த தேர்தலில் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், இத்தேர்தலில் பாஜ வெற்றி பெற்று வரலாறு படைக்க காத்திருக்கிறது. அதே சமயம், வெற்றியை வசப்படுத்தி மீண்டும் இமாச்சலில் ஆட்சி அமைப்போம் என காங்கிரஸ் கூறி உள்ளது. இந்த நிலையில், இன்று பதிவான வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு, அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்.