புதுடெல்லி: இந்தாண்டிற்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் 7ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாகவும், இந்த கூட்டத் தொடரில் 1,500 காலாவதியான சட்டங்களை ரத்து செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 3வது வாரத்தில் தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தல்கள் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
அதன்படி நடப்பு ஆண்டிற்கான குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 7ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகள் இன்னும் நிறைவடையாததால், இந்த ஆண்டும் வழக்கம் போல் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்திலேயே குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறுகிறது. குளிர்கால கூட்டத் தொடர் தொடர்பான தேதிகள் குறித்த இறுதி முடிவை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை அதிகாபூர்வமாக வெளியிடவில்லை.
இதுகுறித்து நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறுகையில், ‘அடுத்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் குளிர்கால கூட்டத்தொடரின் போது 1,500 காலாவதியான சட்டங்களை ரத்து செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.