ராமகுண்டம்: நாடு முழுவதும் ‘பாரத் யூரியா’ என்ற பெயரில் உரம் விற்பனை செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் பிரதமர் மோடி நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ராமகுண்டம் பகுதியில் உரத் தொழிற்சாலையை அவர் திறந்து வைத்தார். பத்ராசலம் – நத்தனபல்லி இடையேயான புதிய ரயில் பாதையையும் அவர் திறந்து வைத்தார். ரூ.2,268 கோடி மதிப்பிலான மேதக் – சித்திபேட்டா – எல்காதுர்த்தி தேசிய நெடுஞ்சாலைக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
கடந்த 8 ஆண்டுகளில் பாஜக அரசு அடிக்கல் நாட்டுவதோடு நிற்காமல் திட்டப் பணிகளை முழுமையாக நிறைவேற்றி வருகிறது. ராமகுண்டம் உரத் தொழிற்சாலைக்கு கடந்த 2016-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டினோம். தற்போது பணிகளை நிறைவு செய்து உர ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்து உள்ளோம்.
தற்போது வெளிநாடுகளில் இருந்து அதிக விலைக்கு உரங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனினும் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு உரம் வழங்கப்படுகிறது. நாட்டில் உள்ள 5 உரத் தொழிற்சாலைகளில் ஆண்டுக்கு 70 லட்சம் டன் உரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
விவசாயிகள் பயன் பெறும் வகையில் நானோ யூரியா டெக்னாலஜியை கொண்டு வந்துள்ளோம். கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் அவதியுற்றனர். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் உரத் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. வரும் காலத்தில் ‘பாரத் யூரியா’ என்ற பெயரில் நாடு முழுவதும் உரம் விற்பனை செய்யப்படும். கள்ளச்சந்தையில் உரம் விற்கப்படுவது தடுக்கப்படும். சிங்கரேனி நிலக்கரி தொழிற்சாலை தனியார் மயமாக்கப்படாது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தாமரை மலர்ந்தே தீரும்: ஹைதராபாத்தில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: தெலங்கானாவை தனது கட்சியின் பெயரில் வைத்திருக்கும் சிலர், மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. தெலங்கானாவில் விரைவில் தாமரை மலரும் என்ற நம்பிக்கை உள்ளது.
சமீபத்தில் நடந்த முனுகோடு இடைத்தேர்தலில் மக்கள் இந்த நம்பிக்கையை வழங்கி உள்ளனர். 2-ம் இடத்தில் பாஜக உள்ளது. இதிலிருந்தே இங்கு தாமரை மலரும் என்பது உறுதியாகிறது. அடுத்து பாஜக ஆட்சி அமைக்கும். அப்போது தெலங்கானாவை சூழ்ந்துள்ள இருள் நீங்கும். இவ்வாறு பிரதமர் பேசினார்.