புதுடில்லி : நீதிபதிகள் நியமனத்துக்கான பரிந்துரைகள் மற்றும் உச்ச நீதிமன்ற, ‘கொலீஜியம்’ வலியுறுத்திய பெயர்கள் உள்ளிட்டவைகளை மத்திய அரசு நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருப்பதற்கு, உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கர்நாடகாவின் பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விபரம்:
உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு அசாதாரணமான தாமத போக்கை கடைப்பிடிக்கிறது.
மேலும், உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த 11 பெயர்கள் மீதும் முடிவெடுக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இந்த விவகாரத்துக்கு உடனடியாக தீர்வு காண உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஏ.எஸ்.ஓகா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நீதிபதிகள் நியமனத்தில், கொலீஜியம் பரிந்துரைத்த 11 பெயர்கள் மத்திய அரசின் ஒப்புதலுக்காக நீண்ட காலமாக காத்திருக்கின்றன. கொலீஜியம் மீண்டும் வலியுறுத்திய பின்னும் காலம் தாழ்த்துவது நியாயமல்ல.
கொலீஜியம் வலியுறுத்திய பின், 3 – 4 வாரங்களில் நீதிபதி நியமனம் செய்யப்பட வேண்டும் என, உச்ச நீதிமன்ற அமர்வு கடந்த ஆண்டு உத்தரவிட்டுள்ளது.
இதுபோல காலம் தாழ்த்துவதால், பரிந்துரைக்கப்பட்ட நபர் தானாக முன்வந்து தன் பெயரை வாபஸ் பெறும் சம்பவங்களும் நடந்துள்ளன. இது முறையான அணுகுமுறை அல்ல.
இந்த விவகாரத்தில் பதில் அளிக்கும்படி மத்திய சட்டத்துறைக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிடப்படுகிறது. விசாரணை, வரும் 28க்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்