பஞ்சமுக அனுமன் திருக்கோயில், கவுரிவாக்கம்

ருள்மிகு பஞ்சமுக அனுமன் திருக்கோயில், சென்னை மாவட்டம், கவுரிவாக்கத்தில் அமைந்துள்ளது.

இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரது மனதிலும் இங்கு ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என எண்ணம் தோன்றியது. அப்போது இங்குள்ள பக்தர் ஒருவரின் கனவில் “பஞ்சமுக அனுமனை பிரதிஷ்டை செய்” என்று அசரீரி ஒலித்தது. அதன்படி ஒரு சிலையைத் தேடிப் போனபோது, வித்தியாசமாக ஒரே நேர்கோட்டில், ஐந்து முகங்களும் அமைந்த, பக்தர்களைத் தன் ஐந்து முகங்களாலும் பார்க்கிற மாதிரியான அபூர்வமான அமைப்புள்ள இந்த அனுமன்சிலை கிடைத்தது.

இதனையடுத்து பக்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பஞ்சமுக அனுமனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தனர். கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும், அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லாநலமும் தரும். நரசிம்மமுகம் தீவினைகளைப் போக்கும். ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும் என்பதால், இவர் சன்னதிமுன் நிற்கும் ஒவ்வொருவரும் அவரவர்க்கு வேண்டியதைக் கேட்கிறார்கள்.

பொதுவாக பஞ்சமுக அனுமன் கோயில்களில், அனுமனின் முகங்களான ஹயக்ரீவ, வராக, நரசிம்ம, வானர, கருட முகங்களில் நான்கு முகங்கள் நாற்புறம் நோக்கி இருக்க, மற்றொரு முகம் அவற்றின் மேலமைந்து இருக்கும். ஐந்து திருமுகங்களும் ஒரே வரிசையில் அமைந்திருப்பது அபூர்வம். அப்படி ஓர் அபூர்வ அமைப்பில் இத்தலத்தில் காணப்படுபவர்தான் உங்களின் எல்லா கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய (பஞ்சமுக) அனுமன்.

மூன்றுநிலை இராஜகோபுரத்துடன் ஆலயம் அமைந்துள்ளது. ஐந்து முகங்கள், பத்துக்கரங்களுடன் கூடிய அனுமன் சன்னதிக்கு அருகில் விஜய விநாயகர் வீற்றிருக்கின்றார்.

அனுமனின் ஒவ்வொரு முகத்திற்கும் உரிய தனிச்சிறப்பாக, வராகஜெயந்தி, நரசிம்மஜெயந்தி, கருடஜெயந்தி, அனுமத்ஜெயந்தி, ஹயக்ரீவ ஜெயந்தி என தனித்தனியே எல்லா விசேஷங்களும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

தடைப்பட்ட காரியங்கள் நடக்கவும், திருமணப் பேறு, குழந்தைப்பேறு கிடைக்கவும் இங்குள்ள அனுமனை வேண்டிக் கொள்கின்றனர்.

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் மட்டைத் தேங்காய்களை கட்டி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.